இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய பெண்கள் அணி தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


மிரட்டிய ரிச்சா கோஷ்:


ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணிக்காக கேப்டன் ஷர்மன்பிரீத் கவுர் – ரிச்சா கோஷ் அதிரடியால் 201 ரன்களை குவித்தது.


குறிப்பாக, இளம் வீராங்கனை ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 64 ரன்களை விளாசினார். அதில் 12 பவுண்டரி 1 சிக்ஸரும் அடங்கும். மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 200 ரன்களை கடப்பது இதுவே முதன்முறை ஆகும். நேற்றைய போட்டியில் அதிரடி அரைசதம் விளாசிய ரிச்சா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரிஷப்பண்ட் சாதனையை முறியடித்துள்ளார்.


ரிஷப் பண்ட் சாதனை முறியடிப்பு:


ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மிக இள வயதிலே அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்த ரிஷப்பண்டின் சாதனையை நேற்று அவர் முறியடித்தார். இதற்கு முன்பு 2019ம் ஆண்டு இந்த சாதனையை ரிஷப் பண்ட் படைக்கும்போது அவருக்கு 21 வயது 206 நாட்கள் ஆகும். ஆனால், நேற்று ரிஷப் பண்ட் சாதனையை முறியடிக்கும்போது ரிச்சா கோஷிற்கு 20 வயது 297 நாட்கள் மட்டுமே ஆகும்.


ரிஷப் பண்ட்டின் சாதனையை முறியடித்த பிறகு ரிச்சா கோஷ் நேற்று மற்றொரு சாதனையையும் படைத்தார். அதாவது, மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அரைசதம் விளாசிய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். இதுதொடர்பாக, பேசிய ரிச்சா கோஷ், உண்மையிலே மிகவும் மகிழ்ச்சி. நான் ஹர்மன்ப்ரீத்துடன் விளையாடும்போது அவர் என்னை வழிநடத்தினார். பந்துகள் எப்படி வருகிறது என்று அவர் எனக்கு கூறினார். வாய்ப்புகள் எனக்கு வரும்போது பயிற்சியின்போது எனக்கு என்ன தெரிந்ததோ அதை செய்கிறேன்.  முதல் நான்கு கவர் டிரைவ் ஷாட் ஆடியது எனக்கு மிகவும் பிடித்த மொமண்ட் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


இளம் வீராங்கனையான ரிச்சா கோஷ் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 151 ரன்களும், 23 ஒருநாள் போட்டிகளில் ஆடி 481 ரன்களும், 52 டி20 போட்டிகளில் ஆடி 824 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 2 அரைசதமும், ஒருநாள் போட்டிகளில் 3 அரைசதமும், டி20யில் 1 அரைசதமும் விளாசியுள்ளார். நேற்று அவர் அடித்த 64 ரன்களே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ரன் ஆகும்.