Womens Asia Cup 2024 Final, IND-W vs SL-W: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும், மகளிர் கிரிக்கெட் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி, ராங்கிரி தம்புல்லா சர்வதேச மைதானத்தில் நடபெற உள்ளது.


மகளிர் ஆசியக் கோப்பை ஃபைனல்:


ஆசிய கண்டத்தில் உள்ள 8 அணிகள் பங்கேற்ற, ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 19ம் தேதி தொடங்கியது.  இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்,  வங்கதேசம், மலேசியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய  8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன. லீக் சுற்று மற்றும் நாக்-அவுட் சுற்றுகளின் முடிவில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த இரு அணிகளும் மோதும் இறுதிப்போட்டி, இன்று நடைபெற உள்ளது.


இந்தியா - இலங்கை மோதல்:


மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டி, இலங்கையில் உள்ள ராங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். நடப்பு சாம்பியனான இந்தியா எட்டாவது முறையாக கோப்பையை வெல்ல தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், தொடரை நடத்தும் இலங்கை அணி முதல் முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய அணியின் பலம், பலவீனங்கள்:


நடப்பு ஆசியக் கோப்பையில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றியையே பெற்றுள்ளது. அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று வலுவான அணியாக திகழ்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே, இந்திய அணி வலுவாக உள்ளது. எனவே, கூடுதல் முயற்சிகளை எதையும் எடுத்து தவறிழைக்காமல், தங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே கோப்பையை எளிதில் வெல்ல வாய்ப்புள்ளது.


நேருக்கு நேர்:


சர்வதேச டி20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 19 முறையும், இலங்கை அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒருபோட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.


மைதானம் எப்படி? 


ராங்கிரி தம்புலா சர்வதேச மைதானத்தின் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. மைதானம் பந்துவீச்சுக்கு உதவுவதால், பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் கவனமாக விளையாட வேண்டும். முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுப்பது ஒரு நல்ல உத்தியாக இருக்கலாம். நடப்பு ஆசிய கோப்பையில் இந்த மைதானத்தில் நடைபெற்ற,  14 போட்டிகளில் 9 முறை சேசிங் அணி வெற்றி பெற்றுள்ளது. 


உத்தேச அணி விவரங்கள்:


இந்தியா: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, உமா செத்ரி, ஹர்மன்ப்ரீத் கவுர்(c), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ்(w), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், தனுஜா கன்வர், ரேணுகா தாக்கூர் சிங்


இலங்கை: விஷ்மி குணரத்ன, சாமரி அட்டபட்டு(c), ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி(வ), கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, இனோஷி பிரியதர்ஷனி, உதேஷிகா பிரபோதனி, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரிய