மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரை வென்றதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் தொடர்களில் அதிக முறை கோப்பைகளை வென்ற கேப்டன் எனும், புதிய சாதனையை ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங் படைத்துள்ளார்.


5 முறை ஐசிசி கோப்பைகளை வென்ற மெக் லானிங்:


தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி, மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஆச்திரேலிய அணி டி-20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. அதோடு,  சர்வதேச கிரிக்கெட் சம்மேளன தொடர்களில் கேப்டனாக செயல்பட்டு அதிக கோப்பைகளை வென்றவர்களின் பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை அந்நாட்டின் மகளிர் அணி கேப்டன் மெக் லானிங் தகர்த்துள்ளார். அதன்படி, மெக் லானிங் இதுவரை ஐசிசி தொடர்களில் 5 முறை கேப்டனாக கோப்பையை வென்றுள்ளார்.


5 கோப்பைகளின் விவரங்கள்:


முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி டி-20 உலகக்கோப்பையை வென்றது. அதைதொடர்ந்து, 2018 மற்றும் 2020ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையையும் அவர் தலைமையில் வென்ற ஆஸ்திரேலிய அணி, கடந்தாண்டு நடைபெற்ற ஒருநாள் உலக்ககோப்பை தொடரிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தான், தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரையும் மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் 5 கோப்பைகள் உடன்  ஐசிசி தொடர்களில் அதிகமுறை வெற்றி பெற்ற கேப்டன் மற்றும் கிரிக்கெட் உலகில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் எனும் பெருமையை மெக் லானிங் பெற்றுள்ளார். அதோடு, தொடர்ந்து 3 முறை டி-உலகக்கோப்பையை வென்ற முதல் கேப்டன் எனும் பெருமைக்கும் சொந்தக்காரரானார்.


பாண்டிங் 4 முறை:


முன்னதாக 4 முறை ஐசிசி தொடர்களில் வென்றுள்ள ரிக்கி பாண்டிங் உடன், மெக் லானிங் சமனில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, கடந்த 2003 மற்றும் 2007ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களிலும், 2006 மற்றும் 2009ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர்களிலும், ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.


தோனி 3 முறை:


அதிகமுறை ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன் எனும் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மூன்றாவது இடத்தில் உள்ளார். முதன்முறையாக கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் டி-20 உலகக்கோப்பை தொடரை, தோனி தலைமையிலான இளம் இந்திய அணி கைப்பற்றியது. அதைதொடர்ந்து, 2011ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரையும், 2013ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் கைப்பற்றினார். இதன் மூலம் ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவிர மற்ற அனைத்து தொடர்களையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் எனும் பெருமையும் தோனிக்கு உண்டு.