மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது. 


மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது. 1  இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள்  இன்று மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது.  


அதன்படி அந்த அணியில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் அலிசா ஹீலே 18 ரன்களிலும், ஆஷ்லே கார்ட்னர் 29 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் மற்றும் மெக் லானிங் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதேசமயம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பெத் மூனி சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார்.


இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. பெத் மூனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் குவித்தார். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில்,  மரிசான் கேப் தலா 2 விக்கெட்டுகளையும், நோன்குலுலேகோ லபா மற்றும் ட்ரையான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. 


அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் லாரா வொல்வர்ட் 61 ரன்களும், சோலே டிரையான் 25 ரன்களும் அதிகப்பட்சமாக எடுத்தனர். ஆனால் பிற வீரர்கள் சரியாக விளையாடததால் தென்னாபிரிக்க அணி பரிதாபமாக தோல்வியை தழுவியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது. 


ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேகன் ஷட், ஆஷ்லே கார்ட்னர், டார்சி பிரவுன், ஜெஸ் ஜோனாசென் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஏற்கனவே 2010, 2012, 2014, 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 


முடிவுக்கு வந்த கிரிக்கெட் திருவிழா


மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற நிலையில் பிரிவு ஏ,பி என இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம் பெற்றது. 


லீக் போட்டிகளின் முடிவில் ஏ பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. பின்னர் நடந்த அரையிறுதியில்  தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.