Women's Asia Cup Asia Cup 2022:   இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்த  இந்திய மகளிர் அணியை பிரதமர் மோடி பாரட்டியுள்ளார்.


இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ’’நமது பெண்கள் கிரிக்கெட் அணி அவர்களின் துணிவு மற்றும் திறமையால் நம்மை பெருமைப்படுத்துகிறது! மகளிர் ஆசிய கோப்பையை வென்ற அணிக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி வீராங்கனைகளின் சிறந்த திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்துகிறது. வீராங்கனைகள் இனி வரும் காலங்களில் எடுக்கும் முயற்சிக்கும் வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டு இருந்தார். 


நேற்று இலங்கை அணிக்கு எதிராக 2022ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை 65 ரன்களுக்குள் சுருட்டியது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இலங்கை அணி இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் எனும் முனைப்பில் களம் இறங்கினாலும், இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ந்து திணறி வந்தது. எட்டு ரன்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்த இலங்கை அணி, ஒன்பது ரன்களில் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஒன்பது ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி அதன் பின்னர் மீளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


தொடர்ந்து இலங்கை அணி விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. முதல் பத்து ஓவர்களில் இலங்கை அணி 26 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை அணி 20 ஓவர்கள் தாக்கு பிடிக்குமா?  50 ரன்களையாவது எடுக்குமா? எனும் அளவிற்கு அதன் நிலை மிகவும் மோசமாக இருந்தது.






16 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் மட்டும் எடுத்து இருந்த இலங்கை அணிக்கு, நம்பிக்கை அளிக்கும் வகையில் ஒருவர் கூட விளையாடவில்லை. இலங்கை அணியைப் பொறுத்த வரையில் ஒடாசி ரனசிங்கே(16 ரன்கள்) மற்றும் இனோகாவைத் (14) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. அதேபோல் யாருமே ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


இந்திய அணியைப் பொறுத்த வரையில் ரேணுகாசிங் மூன்று விக்கெட்டுகளும், ரனா மற்றும் ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய அணி 66 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவது மட்டும் இல்லாமல்  7வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய மகளிர் அணி களம் இறங்கியது. 



7 வது முறையாக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி ()Image Courtesy : BCCIW)


 


அதிரடியாக விளையாடிய இந்திய மகளிர் அணி 8.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 71 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஏழாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரையில்  ஸ்மிருதி மந்தனா 51 ரன்கள் எடுத்தார்.  மூன்று ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் ஓவர் மற்றும்  ஐந்து ரன்கள் விட்டுக் கொடுத்து  முன்று விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய அணியின் ரேனுகா தாக்குருக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.