Women's Asia Cup 2022: மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் தாய்லந்து அணியை இந்திய அணி  74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 


மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த மாதம் ஒன்றாம் தேதியே தொடங்கியது. இதில், மொத்தம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, யு.ஏ.இ, தாய்லாந்து, மலேசியா என மொத்தம் ஏழு அணிகள் கலந்து கொண்டன.  லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இன்று (13/10/20200) நான்கு அணிகளும் தங்களது அரையிறுதிப் போட்டியை விளையாடவிருக்கிறது. இந்திய மகளிர் அணி தாய்லாந்து மகளிர் அணியையும், பாகிஸ்தான் மகளிர் அணி இலங்கை மகளிர் அணியையும் எதிர் கொள்கின்றன. 


முதல் அரையிறுதிப் போட்டியில், ஆறு முறை சாம்பியனான இந்திய மகளிர் அணியுடன் தாய்லாந்து மகளிர் அணி மோதியது. இதில், டாஸ் வென்ற தாய்லாந்து அணி இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது. அதன் படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய மகளிர் அணி சீரான இடைவெளியில் 20 ஓவர்கள் முடிவில்,  ஆறு விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை எடுத்தது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா 28 பந்துகளில் 5 பவுண்ட்ரி ஒரு சிக்ஸர் உட்பட 42 ரன்கள் குவித்திருந்தார். 


அதன் பின்னர், 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தாய்லாந்து அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீராங்கனைகள் உட்பட மிடில் ஆர்டரில் களம் இறங்கிய வீராங்கனைகளும் சிறப்பாக விளையாட முடியாமல் தினற, முதல் பத்து ஓவர்களில் தாய்லாந்து அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களே எடுத்து இருந்தது. 20 ஓவர்கள் முடிவில் தாய்லாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ரன்களே எடுத்தது. இதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. தாய்லாந்து அணியைப் பொறுத்த வரையில், நருமேல் சைய்வாய் 21 ரன்களும், நாட்டயா பூச்சாதம் 21 ரன்களும் எடுத்து இருந்தனர். இந்திய அணியின் தீப்தி சர்மா நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 


இதற்கு முன்னர் லீக் போட்டியில் இரு அணிகளும் மோதிக் கொண்டதில், இந்திய மகளிர் அணி 37 ரன்களில் தாய்லாந்து அணியைச் சுருட்டியதும் குறிப்பிடத்தக்கது.