உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்தாக் அலி தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியின் நேற்று நடைபெற்ற போட்டியில் பரோடா மற்றும் செளராஷ்டிரா அணிகள் நேருக்கு நேர் மோதின. 


முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய செளராஷ்டிரா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை துரத்தி வெற்றியை தொட்டது. 


இந்தநிலையில், புதன்கிழமை நடந்த குரூப்-டி ஆட்டத்தில் பரோடா மற்றும் செளராஷ்டிரா அணிகள் விளையாடிய போட்டியின்போது முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு மற்றும் ஷெல்டன் ஜாக்சன் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராயுடு பரோடா அணிக்காக விளையாடியபோது ஜாக்சன் செளராஷ்டிரா அணிக்காக விளையாடினார். சௌராஷ்டிரா இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரில் ராயுடு கவரில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். 


அப்போது திடீரென கோவப்பட்ட அம்பத்தி ராயுடு, ஜாக்சனை நோக்கி கையை காட்டியபடி அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எதிரே இருந்த ஷெல்டன் ஜாக்சனும் பேட்டை ஓங்கியபடி நேராக வந்தார். 


இருவருக்கும் இடையே பலத்த தகராறு ஏற்பட்டதைக் கண்டு நடுவர்களும் வீரர்களும் உதவிக்கு வர வேண்டியதாயிற்று. அப்போது ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியாவும் அருகில் வந்து ராயுடுவை தனியாக அழைத்துச் சென்றார். ஜாக்சன் மற்றும் ராயுடு மோதும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 






 வர்ணனையாளரின் கூற்றுப்படி, பந்துகளை எதிர்கொள்ள ஜாக்சன் அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் பீல்டிங் செய்து கொண்டிருந்த ராயுடு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதை அடுத்து சண்டை ஏற்பட்டதாக தெரிவித்தனர். 






இந்த போட்டியில் பரோடா அணிக்காக மித்தேஷ் படேல் 35 பந்துகளில் 60 ரன்களும், விஷ்ணு சோலங்கி 33 பந்துகளில் 51 ரன்களும் எடுத்திருந்தனர். ராயுடு இந்த போட்டியில் கோல்டன் டக் அவுட்டில் வெளியேறினார். அதேபோல், செளராஷ்டிரா வீரர் ஷெல்டன் ஜாக்சன் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 


இந்திய அணி வீரர்களான சேதேஷ்வர் புஜாரா (சௌராஷ்டிரா), க்ருணால் பாண்டியா (பரோடா), மற்றும் வருண் ஆரோன் (பரோடா) ஆகியோரும் இந்தப் போட்டியில் இடம்பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


நடந்துகொண்டிருக்கும் சையத் முஷ்டாக் அலி டிராபியில், பரோடா எலைட் குரூப் D இன் முதல் ஆட்டத்தை வென்றது. அதே நேரத்தில் செளராஷ்டிராவின் 2022 சீசனின் தொடக்க ஆட்டத்தில் (குஜராத்துக்கு எதிராக) மழையால் கைவிடப்பட்டது.