பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா:
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 3- 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் தான் நடைபெற்றது. முன்னதாக, இந்த டெஸ்ட் தொடருடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 34 ரன்கள் எடுத்தார், அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்கள் எடுத்தார்.
அதிரடி ஆட்டக்காரர் வார்னர்:
கடந்த 2009 ஆம் ஆண்டில் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் டெஸ்ட் போட்டியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 8786 ரன்கள் குவித்துள்ளார். 44.6 என்ற சராசரியில் 26 சதங்கள், 3 இரட்டை சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் அடித்துள்ளார்.
அந்த வகையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவரை ஆஸ்திரேலிய அணியினரும், பாகிஸ்தான் அணியினரும் வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர். டேவிட் வார்னரும் தன்னுடைய குடும்பத்தினர் முன்னிலையில் விடைபெற்றார்.
இந்நிலையில், ஆரம்ப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிய வார்னர் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தும் அளவுக்கு முன்னேறியது அபாரமானது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
அபாரமான வளர்ச்சி:
இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், “அடித்து நொறுக்கக் கூடிய டி20 பேட்ஸ்மேனாக இருந்து ஒரு நெகிழ்ச்சியான டெஸ்ட் வீரராக மாறியது டேவிட் வார்னர் பயணத்தின் உறுதியை எடுத்துக்காட்டுகிறது. கிரிக்கெட்டில் அவருடைய வளர்ச்சி அபாரமானது.
குறிப்பாக இன்னிங்ஸை வேகப்படுத்தும் கலையில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தன்மையை அவர் காட்டியுள்ளார். அற்புதமான டெஸ்ட் கேரியருக்காக வாழ்த்துக்கள் டேவிட். உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்... முதல் இடத்தை அடித்து தூக்கிய ரோகித் படை!
மேலும் படிக்க: 2024 T20 World Cup: டி 20 உலகக் கோப்பை...”விராட் கோலியும் ரோகித் சர்மாவும்...” - இர்பான் பதான் சொன்ன அந்த வார்த்தை!