தொடர்ந்து ஃபார்மில் இல்லாமல் விளையாடி வரும் விராட் கோலி எதிர்வரும் டி-20 உலகக்கோப்பை போட்டிக்குள் மீண்டுவருவாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், ரன்மிஷின், அதிரடி ஆட்டக்காரன், கவர் டைரைவ் கிங், ஆக்ரோஷமான கிரிக்கெட்டர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அதிரடி பேட்ஸ்மென், முன்னாள் கேப்டன் விராட் கோலி. 2008ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தி கோப்பையினை வென்றவர் அந்த இளம் விராட். அதே ஆண்டில் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பினையும் பெற்றார். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலி இதுவரை சந்திக்காத விமர்சனங்களே கிடையாது. குறிப்பாக 2019ம் ஆண்டு உலக்கோப்பையின் போது அவரது மோசமான ஆட்டத்தால் பெரிதும் விமர்சனத்திற்கு ஆளானார். அப்போது அவருக்கு துணையாக நின்றது, அவரது ரசிகர்களும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் தான்.
விராட் எனும் தனி ராஜ்ஜியம்
முதலில் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த விராட் கோலி, எதிர் அணிகளுக்கு பெரும் சிம்ம சொப்பனமாகத்தான் இருந்தார். ஜாம்பவான்கள் சச்சின், ஷேவாக், யுவராஜ், கம்பீர் போன்றோரே ஆட்டமிழந்து விட்ட போதும் தனது க்ளாஸான கவர் டைரைவ் ஆட்டத்தால் எதிர் அணி வீரர்களுக்கு குடைச்சல் கொடுத்தவர். இவரது நேர்த்தியான ஆட்டத்தினை கண்டு இவரை சரியாக பயன்படுத்தி நினைத்தமுன்னாள் கேப்டன் தோனி, மிடில் ஆர்டரில் ஆடிக்கொண்டு இருந்தவரை ஒன்டவுனாக களமிறக்கி அணியின் வெற்றியில் முத்திரை பதிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட விராட், தனது பலமான ஆட்டதால் அணிக்கு வெற்றிகளை பெற்றுத்தந்தார். அதோடு மட்டுமின்றி, தனது தனிப்பட்ட ரன் வேட்டையையும் நடத்தி வந்தார். இதுவரை 261 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடி 43 சதங்களையும் 64 அரை சதங்களையும் விளாசியுள்ளார். 102 டெஸ்ட் போட்டியில் விளையாடி 27 சதங்களயும் 28 அரை சதங்களயும் அடித்துள்ளார். ஒட்டு மொத்த சர்வதேச போட்டிகளில் 71 சதங்கள் உட்பட 23,709 ரன்களை விளாசியுள்ளார். இதுவரை 99 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் 30 அரை சதங்களை விளாசியுள்ளார். இன்னும் சர்வதேச டி-20 போட்டியில் மட்டும் சதம் அடிக்காமல் உள்ளார். அதேநேரத்தில் மொத்தம் 223 ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக ஆடியுள்ள விளையாடியுள்ள விராட் ஐந்து சதங்களை அடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் செய்திடாத பல சாதனைகளை கேப்டனாகவும் அணியாகவும் நிகழ்த்திக் காட்டியவர்.
யானைக்கும் அடிசறுக்கும்.. விராட் மட்டும் விதிவிலக்கா?
இப்படியான சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விராட் இன்றைக்கு சந்தித்து வரும் விமர்சனங்கள் மிகவும் மோசமானவை. குறிப்பாக இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாண்டி பனேசர் விராட் கோலியால் அணிக்கு எந்த பயனும் இல்லை என விமர்சனம் செய்துள்ளார். பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்வியும், விமர்சனமும் விராட்டின் தூக்கத்தினை கெடுப்பவை. யானைக்கும் அடி சறுக்கும் என்பதை நன்கு உணர்ந்த உலகம், ஒரு மாபெரும் கிரிக்கெட் வீரனை தொடர்ந்து சிதைத்து வருவது வேதனைக்குரிய ஒன்று. தான் விளையாடத் துவங்கிய காலம் முதல் இன்று வரை எதிர் அணியின் வெற்றியை அவ்வளவு எளிதாக்கித் தந்ததில்லை. 2009 ஆண்டு தனது முதல் சர்வதேச சதத்தினை அடித்த விராட் அதற்கடுத்து, தொடர்ந்து வந்த அனைத்து ஆண்டுகளும் சதங்களை அறுவடை செய்துள்ளார். குறிப்பாக 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் மட்டும் தலா 11 சதங்கள் அடித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காத விராட், தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். ஒருவர் தனது ’தி பெஸ்ட்’ பர்ஃபாமன்சை வெளிப்படுத்தியபோது கொண்டாடிய கிரிக்கெட் உலகம், இன்று அவர் எதிர்கொண்டு வரும் இக்கட்டான கால நிலையில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் ஷர்மா மற்றும் இந்திய அணி அவருக்கு உறுதுணையாக இருப்பது அவருக்கு நம்பிக்கை அளிக்கும் என எதிர் பார்க்கலாம்.
நாயகன் மீண்டும் வர..
எதிர்வரும் டி-20 உலக்கோப்பையில் களமிறங்கவுள்ள விராட்கோலிக்கு அது அவரது 100வது சர்வதேச டி-20 போட்டியாகும். இதில் விராட் மீண்டு தனது முதலாவது சர்வதேச டி-20 சதத்தினை அடிப்பார் என உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். மேலும் தன்மேல் வீசப்படும் அனைத்து விமர்சனங்களுக்கு தனது க்ளாஸான கவர் டைரைவ் ஷாட் மூலம் பதிலடி கொடுக்க வாழ்த்துவோம். ”நாயகன் மீண்டும் வர எட்டு திக்கும் பயம்தானே”…