Rohit Sharma MI: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக, ஜெயவர்தனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.


மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மாற்றம்:


கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியபிறகு, களம் கண்ட முதல் சீசனிலேயே மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் தான், ஜெயவர்தனே மீண்டும் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், ரோகித் சர்மா மீண்டும் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.


ரோகித் - ஜெயவர்தனே கூட்டணி:


2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை வலுவான அணியை கட்டமைத்த ஜெயவர்தனே மற்றும் ரோகித் சர்மா கூட்டணி, மூன்று முறை ஐபிஎல் பட்டங்களை கைப்பற்றி அசத்தியது.  கிரிக்கெட்டில், சில பார்ட்னர்ஷிப்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஜெயவர்தனே - ரோகித் கூட்டணி, அவர்களின் உத்திகள், விளையாட்டை கணிக்கும் முறை மற்றும் அழுத்தத்தின் கீழ் அமைதியான அணுகுமுறை ஆகியவை அணிக்கான சிறந்த கலாச்சாரத்தை வடிவமைக்க உதவியது. இந்த நிலையில், கடந்த சில சீசன்களாக மோசமாக செயல்பட்டு வரும் அணியை மேம்படுத்தும் நோக்கில், தலைமைப் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் நீக்கப்பட்டுள்ளார். 3 கோப்பைகளை பெற்றுக் கொடுத்த ஜெயவர்தனே மீண்டும்  அந்த பதவிக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இதனால், ரோகித்தும் கேப்டன் ஆவாரா என்ற கேள்வ் எழுந்துள்ளது.


ஏமாற்றம் தந்த ஹர்திக் பாண்ட்யா:


குஜராத் அணியை இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு வழிநடத்தி, ஒருமுறை கோப்பையை வென்று கொடுத்தார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, தனது தாய் அணிக்கு திரும்பினார் நட்சத்திர ஆல்ரவுண்டர். இதனால், மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அணியின் சமநிலை தவறியதோடு, ரசிகர்களும் மைதானத்திலேயே இதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த எதிர்ப்பை மேலும் வலுவாக்கும் வகையில், பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. இதனிடையே, இந்திய அணியின் கேப்டனாக டி20 உலகக் கோப்பையையே வென்றுக் கொடுத்து அசத்தியுள்ளார் ரோகித் சர்மா. இதனால், அவருக்கு மீண்டும் மும்பை அணியில் கேப்டன் பொறுப்பு வழங்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.


ரோகித்திற்கு புதிய வாய்ப்பு:


ஜெயவர்த்தனே மும்பை அணியின் தலைமை பயிற்சியாளரா,அ திரும்புவது அணியின் இழந்த பெருமையை மீட்டெடுக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் ரோகித்தை மீண்டும் கேப்டனாக நிலைநிறுத்துவது அந்த செயல்முறையைத் தொடங்குவதற்கான நடவடிக்கையாக இருக்கலாம். கடந்த காலங்களில் ஏற்கனவே பலனைத் தந்த அவர்களது கூட்டணி, மும்பை அணியின் கேப்டன்சி நெருக்கடிக்கு விடையாக இருக்கலாம்.


அணியை மீண்டும் கட்டியெழுப்பும் ஜெயவர்த்தனேவின் பணி, தக்கவைப்பதற்கான வீரர்களின் பட்டியலை இறுதி செய்வதில் இருந்து தொடங்குகிறது. அதோடு, ரோகித்தை மீண்டும் மும்பை அணியின் கேப்டன் ஆக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுப்பார் என நம்பப்படுகிறது.