Womens T20 Worldcup: மகளிர் டி20 உலகக் கோப்பையின் இன்றைய லீக் போட்டியில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.


மகளிர் டி20 உலகக் கோப்பை:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின், மகளிர் டி20 உலகக் கோப்பை துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடைபெற்று வருகிறது. அதன் முடிவில், இரண்டு பிரிவிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில் குரூப் ஏ பிரிவில் விளையாடிய 4 போட்டிகளிலும் வென்று, ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது அணி யார் என்பதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது.


புள்ளிப்பட்டியலில் இந்தியா:


லீக் சுற்றின் முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம், 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இருப்பினும், அதற்கடுத்த நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில், கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொண்டது. 152 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அணியில், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுரை தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தற்போதைய சூழலில், நியூசிலாந்தும் 4 புள்ளிகளை பெற்று இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் மட்டுமே இந்தியா புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.


அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?


இந்தியாவின் லீக் சுற்று போட்டிகள் அனைத்துமே முடிந்த நிலையில், இனி அரையிறுதி வாய்ப்பு என்பது மற்ற போட்டிகளின் முடிவுகளையே சார்ந்து உள்ளது. குறிப்பாக இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேற முடியும். இதன் காரணமாகவே, இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டும் என்றும், நியூசிலாந்து தோற்க வேண்டும் எனவும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் வேண்டி வருகின்றனர்.


பாகிஸ்தான் வெல்லுமா?


பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி, இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி, இலங்கை அணியிடம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், இலங்கை அணி நடப்பு உலகக் கோப்பையில் விளையாடிய 4 லீக் சுற்று போட்டிகளிலும் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.