பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) புதிய தலைவர் நஜாம் சேத்தி, புதிய வருடத்தில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்குச் சென்று கலந்துகொள்ளுமா? கொள்ளாதா? என்ற நாட்டின் நிலைப்பாடு குறித்து ரசிகர்களுக்கு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான்
இந்திய அணி கடைசியாக 2008 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்குச் சென்றது. அவ்வருடம் நவம்பர் 26 ஆம் தேதி நடந்த மும்பை தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பு தொடர்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டு விட்டன. தாக்குதல்களுக்குப் பிறகு, 2012 இல் நடந்த இருதரப்புத் தொடருக்காக பாகிஸ்தான் ஒருமுறை இந்தியாவுக்குச் சென்றது.
அதன் பிறகு பெரிதாக போட்டிகள் விளையாடாததால் ரசிகர்களுக்கு இந்தியா பாகிஸ்தான் போட்டியை அதிகம் காண முடியாமல் போனது. இருப்பினும், இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஏசிசி நிகழ்வுகளில் சில போட்டிகளில் விளையாடியுள்ளன. சாதாரண போட்டிகளில் விளையாடாததால் இந்த போட்டிகள் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகள் வைத்து போட்டி நாளை விமர்சையாக கொண்டாடுவார்கள்.
ஆசியக்கோப்பை - உலகக்கோப்பை
பல ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் அரசியல் பிரச்சனைகள் காரணமாக பல வெளிநாட்டு அணிகளும் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து வந்தன. இந்த வருடம் தான் நியூசிலாந்து போன்ற அணிகள் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடி வருகின்றன. அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஆசியக்கோப்பையையும் பாகிஸ்தான் நடத்தும் உரிமையை பெற்றது. அதே ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை நடப்பதுதான் இந்த பேச்சுப் போருக்கு காரணமாக அமைந்தது.
இந்தியா செல்லுமா?
உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கு இந்தியா பாகிஸ்தான் செல்லுமா? செல்லாதா? என்ற கேள்வி பெரிதாக எழுந்த நிலையில், இந்தியா வர மறுத்தால், நாங்கள் உலகக்கோப்பைக்கு செல்ல மாட்டோம், பாகிஸ்தான் இந்தியா போட்டி இல்லாத உலகக்கோப்பையை யார் பார்ப்பார்கள் என்று பாகிஸ்தான் முன்பு மிரட்டியிருந்தது.
அக்டோபரில் நடைபெறும் கான்டினென்டல் போட்டிக்கு இந்தியா அணியை அனுப்பாது என்று பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவருமான ஜெய் ஷா அறிவித்ததை அடுத்து, இரு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.
பாகிஸ்தான் முடிவு என்ன?
உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்த முடிவு அந்நாட்டின் அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்தது, கிரிக்கெட் வாரியத்தின் முடிவு அல்ல என்று நஜாம் சேத்தி நேற்று (திங்கட்கிழமை) கூறினார், "இந்தியாவுக்குப் போக வேண்டாம் என்று அரசாங்கம் சொன்னால், நாங்கள் போக மாட்டோம். பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் உறவுகள் தெளிவாக இருக்கட்டும். சுற்றுப்பயணம் செல்லலாமா..? வேண்டாமா..? என்பது குறித்த முடிவுகள் எப்போதும் அரசாங்கத்தால்தான் எடுக்கப்படுகின்றன, PCB அதனை தெளிவுபடுத்த மட்டுமே முடியும்" என்று சேத்தி கராச்சியில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஏசிசியுடன் தொடர்பில் இருப்பதாகவும் சேதி தெரிவித்தார். "நிலைமை என்ன என்பதை நான் பார்த்துவிட்டு கூறுகிறேன். நாம் எடுக்கும் எந்த முடிவும் நம்மை தனிமைப்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்." என்றார். ஒரு வேளை இந்த பஞ்சாயத்து முடிந்து ஆசியக்கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு பயணம் செய்தால், 13 ஆண்டுகளில் அங்கு செல்லும் முதல் சுற்றுப்பயணம் இதுவாக இருக்கும்.