இந்தியா - வங்கதேசம்:


இந்தியா மற்றும் வங்கதேசம் உடனான  இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை டாக்கா மைதானத்தில் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 314 ரன்களில் ஆல்-அவுட்டானது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய,  வங்கதேச அணி 231 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


தடுமாறிய இந்திய அணி:


இதையடுத்து, 145 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி,  74 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியாவின் வெற்றி என்பது கேள்விக்குறியானது. ஆனால் எட்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த  ஷ்ரேயஸ் ஐயர்- அஸ்வின் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் தேவையான நேரத்தில் பந்துகளை பவுண்டரிகளுக்கு ஓடவிட்டு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.  இதன் மூலம், இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ஆட்டநாயகன் விருது பெற்ற அஸ்வின்:


இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட  42 ரன்களுடனும், ஷ்ரேயஸ் ஐயர் 29 ரன்களுடனும் அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.  இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 6 விக்கெட்டுகளை வீழ்திய அஸ்வின், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு வித்திட்டதால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 


இது, டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பெறும் ஒன்பதாவது ஆட்டநாயகன் விருது ஆகும். இதுவரை இந்திய அணிக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 36 வயதான அஸ்வின், 9 முறை ஆட்டநாயகன் விருதையும், 9 முறை தொடர்நாயகன் விருதையும் பெற்றுள்ளார். அதோடு, அதிகமுறை டெஸ்ட் போட்டியில் தொடர் நாயகன் விருதை அதிக முறை வென்ற வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார்.


சச்சின் சாதனை: 


முன்னதாக, 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் 14 முறை ஆட்டநாயகனாவும், 5 முறை தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருது பெற்ற வீரர்களின் பட்டியலில், 19 விருதுகளுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் 18 விருதுகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா உடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. அதில் சிறப்பாக செயல்படுவதன் மூலம், சச்சினின் சாதனையை அஸ்வின் முறியடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.