2023ல் இந்தியாவில் நடக்கவுள்ள இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ரோகித் ஷர்மா மற்றும் கே. எல். ராகுலுக்கு இந்திய அணியில் இடம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. 


ஹர்திக் பாண்ட்யா கேப்டன்:


வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்திய அணியை கே. எல். ராகுல் வழிநடத்தினார். ஒருநாள் போட்டித்தொடருக்குப் பிறகு, இந்தியா வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்தது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கே. எல். ராகுல் அணியை வழிநடத்தினார்.


இந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரினை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதற்கு முன்னர் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி  1 - 2  என்ற கணக்கில் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.  வரும் 2023ஆம் அண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. 


ரோகித், கே.எல்.ராகுலுக்கு என்னாச்சு..?


இந்திய அணியின் முழு நேரக் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு காயம் இன்னும் சரியாகாத காரணத்தால், அவர் இந்த தொடரில் பங்குபெறும் வாய்ப்பினை இழந்துள்ளார். மேலும், வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக செயல்பட்ட கே. எல். ராகுலுக்கு இந்தியா - இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ள நாட்களில் திருமணம் நடைபெறவுள்ளது. இதனால் இவரும் இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 






இதனால், இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே இந்திய அணியில் ஆல் - ரவுண்டராக இருப்பதுடன் பகுதி நேரக் கேப்டனாகவும் உள்ளார். இவர் இதற்கு முன்னர் அயர்லாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வழநடத்தி தொடரினை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


நீக்கப்பட்ட ட்வீட்:


இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்துவார் என்பது போன்ற வீடியோவை, இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை ஒளிபரப்பும் ஒப்பந்தங்களை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது.


ஆனால், ரசிகர்களிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பியதும் அந்த வீடியோவை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியது. ஏற்கனவே, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டதோடு, 3 போட்டிகள் கொண்ட தொடரையும் 1-0 என கைப்பற்றியது. நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி கோப்பையையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.