டிரினிடாட்டில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா மோதும் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரண் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது.
312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமாக இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49. 4 பந்துகளில் 312 ரன்கள் குவித்து இந்த தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்தது. மேலும் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடரையும் கைப்பற்றியது. 35 பந்துகளில் ( 3 பெளண்டரி, 5 சிக்ஸர்கள்) 64 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த அக்சார் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்றைய இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவதன் மூலம் ஷாய் ஹோப் தனது 100 வது ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். இதே 100 வது போட்டியில் தனது சதத்தையும் ஷாய் ஹோப் பதிவு செய்தார். இது 13வது சதம் ஆகும். ஒட்டுமொத்த அளவில் 100வது ஒருநாள் போட்டியில் ஆடி சதமடித்த 10வது வீரர், இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை ஷாய் ஹோப் படைத்தார்.
இந்த நிலையில், 100வது ஒருநாள் போட்டியில் சதமடித்த வீரர்கள் பட்டியலை கீழே காணலாம் :
- கோர்டன் கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்) vs பாகிஸ்தான் - 1998
- ஜிஎல் கெய்ர்ன்ஸ் (நியூசிலாந்து) vs இந்தியா - 1999
- யூசுப் யூஹானா (பாகிஸ்தான்) vs இலங்கை - 2000
- குமார் சங்கக்கரா (இலங்கை) vs பாகிஸ்தான் - 2004
- கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) vs இங்கிலாந்து - 2004
- மார்கஸ் ட்ரெஸ்கோதிக் (இங்கிலாந்து) vs வங்காளதேசம் - 2005
- ராம்நரேஷ் சர்வான் (வெஸ்ட் இண்டீஸ்) vs இந்தியா - 2006
- டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) vs இந்தியா - 2017
- ஷிகர் தவான் ( இந்தியா) vs தென்னாப்பிரிக்கா - 2018
- ஷாய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்) vs இந்தியா - 2022
அதேபோல், தங்களது 100 வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக இதுவரை 4 வீரர்கள் சதமடித்து அசத்தியுள்ளனர். அந்த பட்டியலில் நியூசிலாந்து வீரர் ஜிஎல் கெய்ர்ன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராம்நரேஷ் சர்வான், ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர், மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் ஆகியோர் உள்ளனர்.
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தால் (WICB) ஷாய் ஹோப்க்கு 100 என்ற எண் பொறிக்கப்பட்ட சிறப்பு ஜெர்சியை லெஜண்டரி கிரிக்கெட் வீரரும், தற்போதைய தேர்வாளருமான சர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் வழங்கினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்