2 வார கடுமையான போட்டிக்கு பிறகு இந்தியா மற்றும் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இரண்டு ஆசிய ஜாம்பவான்களான இந்தியா - இலங்கை அணிகள் வரலாற்றில் 8வது முறையாக நேருக்கு நேர் இறுதிப்போட்டியில் மோதுகிறது. இதில், இந்திய அணி 4 முறையும், இலங்கை அணி 3 முறை வெற்றி பெற்றுள்ளது.
ஆசியக் கோப்பை 2023 போட்டியில் சுப்மன் கில் 275 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, குசல் மெண்டிஸ் 253 ரன்களுடனும், சதீர சமரவிக்ரம 215 ரன்களுடனும் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.
பந்துவீச்சை பொறுத்தவரை, இலங்கை பந்துவீச்சாளர் பதிரனா 11 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக வெல்லலே மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி 2 மற்றும் 3 வது இடத்தில் உள்ளனர்.
போட்டி விவரம்:
- ஆசிய கோப்பை 2023
- இறுதிப்போட்டி : இந்தியா - இலங்கை
- இடம்: கொழும்பு, இலங்கை
- நேரம்: செப்டம்பர் 17, மாலை 3 மணி
இந்திய அணியில் மாற்றம் இருக்குமா..?
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி அதிரடியாக 5 மாற்றங்களை செய்தது. இதன் காரணமாகவே இந்திய அணி தோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்றைய போட்டியில் பெஞ்சில் அமரவைக்கப்பட்ட விராட் கோலி, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் மீண்டும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஐவரும் உள்ளே நுழையும் போது, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வெளியேறுவார்கள்.
வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கொழும்பு ஆடுகளங்கள் சாதகமாக இருப்பதால், ஷர்துல் தாக்கூரை இந்தியா விலக்கி, காயம் அடைந்த அக்சர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரை விளையாட வைக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
கணிக்கப்பட்ட இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா & முகமது சிராஜ்.
இலங்கை அணியின் நிலைமை என்ன..?
இலங்கை அணியின் நட்சத்திர மாயாஜால பந்துவீச்சாளர் மகேஷ் தீக்ஷனா காயம் காரணமாக விலகியுள்ளார். தீக்ஷனா இல்லாத நிலையில், லெக் ஸ்பின்னர் துஷான் ஹேமந்த இலங்கை அணியில் இணைந்து பலம் சேர்க்கலாம். குசல் பெரேரா இலங்கை அணிக்கு திரும்பியது நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கணிக்கப்பட்ட இலங்கை அணி:
பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), துனித் வெல்லலகே, துஷான் ஹேமந்த, மதீஷ பத்திரன & பிரமோத் மதுஷன்.
யார் யாருக்கு போட்டியாக இருக்கும்..?
வெல்லலகே vs ரோஹித், பும்ரா vs பெரேரா, குல்தீப் vs ஸ்ரீலங்கா மிடில் ஆர்டர் ஆகியோ மோதல் சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.