ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது. இது தொடங்க இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களின் ஆயத்தப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன. இதற்கிடையில், கடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் ரன்னர்-அப் ஆன நியூசிலாந்து, இந்திய ஆடுகளங்களைப் பற்றி சிறந்த யோசனை கொண்ட ஒருவரை தங்கள் அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது.


ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அதிகமுறை ரஞ்சி சாம்பியனான மும்பையின் முன்னாள் செயல்திறன் ஆய்வாளர் சவுரப் வால்கரை தங்கள் அணியுடன் இணைக்க நியூசிலாந்து கிரிக்கெட் அணி முடிவு செய்துள்ளது. இதையடுத்து சவுரப் வால்கர் வருகின்ற ஆகஸ்ட் 30 ம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் தனது பதவியை தொடங்குவார் என்றும், ​​சுழலுக்கு உகந்த இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப நியூசிலாந்து அணியை தயார் செய்வார் என்றும் தெரிகிறது. 


38 வயதான செயல்திறன் ஆய்வாளர் சவுரப் வால்கர் பற்றி பேசுகையில், அவர் மும்பை ரஞ்சி அணியில் 8 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டு, படிப்பை விட்டுவிட்டு, சென்னையில் ஸ்போர்ட்ஸ் பயோமெக்கானிக்ஸில் ஓராண்டு படிப்பை படித்துவிட்டு, இந்தத் துறையில் அடியெடுத்து வைத்தார் சவுரப்.






நியூசிலாந்துடனான இணைப்போவது குறித்து சவுரப் வால்கர் கூறுகையில், ”அனைத்து அணிகளுக்கும், குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக எனது தயாரிப்பை தொடங்கிவிட்டேன். நியூசிலாந்து அணி நிர்வாகம் இந்திய வீரர்கள் குறித்த குறிப்பிட்ட தகவல்களை என்னிடம் எதிர்பார்க்கும். மும்பை அணியில் நான் பணியாற்றிய காலத்தில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூர், சூர்யகுமார் யாதவ் மற்றும் பலருடன் பணியாற்றியுள்ளேன். ஒருநாள் உலகக் கோப்பையில் நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட்டுக்கு விஷயங்களை எளிதாக்குவதே எனது முயற்சியாக இருக்கும்.


நான் சச்சின் டெண்டுல்கர் உட்பட அனைத்து வீரர்களுடனும் வெவ்வேறு அணிகளில் வெவ்வேறு பயிற்சியாளர்களுடனும் பணியாற்றியுள்ளேன். ஆனால் சந்து சார் மற்றும் ஓம்கார் சால்வி ஆகியோரிடம் நான் கற்றுக்கொண்ட ஒழுக்கமான அணுகுமுறை மற்றும் குறிப்பிட்ட பேட்ஸ்மேன்களுக்கான பந்துவீச்சு வியூகம் ஆகியவை எனக்கு பெரிதும் உதவுகின்றன” என தெரிவித்தார். 


 மும்பையுடனான தனது பதவிக்காலத்திற்கு பிறகு, வால்கர் 2021 உலகக் கோப்பையின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி போன்ற அணிகளுக்கும் தனது நிபுணத்துவத்தை வழங்கியுள்ளார். தற்போது, ​​வாக்கர் ஜோஸ் பட்லர் தலைமையிலான மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் தி ஹன்ட்ரடில் பணிபுரிந்து வருகிறார். 


 நியூசிலாந்து அணி இந்தியாவுடன் அக்டோபர் 22 ஆம் தேதி தர்மசாலா மைதானத்தில் ஒரு போட்டியில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.