மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி,20 ஓவர்களில் 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், போட்டியின்போது நாங்கள் சில தவறுகளை செய்தோம் என்று ஒப்புக்கொண்டார். இது ஒரு இளம் அணி, அதில் தவறுகள் இருக்கும் என்று கூறிய பாண்டியா, வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரை வெகுவாக பாராட்டினார்.



சில தவறுகளைச் செய்தோம்


டீம் இந்தியாவின் தோல்விக்குப் பிறகு பேசிய பாண்டியா, “நாங்கள் சில தவறுகளைச் செய்தோம், அதன் விலையாக தோல்வியை சந்தித்தோம். இது ஒரு இளம் அணி, அதனால் தவறுகள் நடக்கும். அதில் இருந்து கற்றுக்கொண்டு, நாங்கள் ஒன்றாக முன்னேறுவோம். முழு போட்டியும் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது, ஒரு பாசிட்டிவான விஷயம். வரும் போட்டிகளுக்கும் இது பொருந்தும். டி20 போட்டியில் விக்கெட்டுகளை இழந்தால் இலக்கை அடைவது கடினம். இதுதான் எங்களுக்கு நடந்தது. சில நல்ல ஷாட்கள் போட்டியின் திசையை மாற்றும், ஆனால் சில விக்கெட்டுகள் விழுந்தால் இலக்கை அடைவது கடினம்," என்று பேசினார்.


தொடர்புடைய செய்திகள்: Road Accident: வாகன ஓட்டிகளே உஷார்! செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய 1040 பேர் பலி - மத்திய அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்


முகேஷ் குமாருக்கு பாராட்டு


முகேஷ் குமாரை பாராட்டிய பாண்டியா திலக் வர்மாவையும் குறிப்பிட்டு பேசினார். “முகேஷ் கடந்த இரண்டு வாரங்களாக வெஸ்ட் இண்டீசில் இருக்கிறார். இங்கு அவர் மூன்று வடிவங்களிலும் அறிமுகமாகி இருப்பது நல்ல விஷயம். அவர் உண்மையிலேயே நல்ல வீரர். அணிக்கு இதயப்பூர்வமாக பங்களிக்க நினைக்கிறார். அவர் தொடர்ந்து நல்ல ஓவர்கள் வீசி சிறப்பாக செயல்பட்டார். திலக் இன்னிங்ஸை தொடங்கிய விதத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். பயமின்றி விளையாடுகிறார்," என்று பாண்டியா குறிப்பிட்டார்.



இந்திய அணி தோல்வி


முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 149 ரன்களை குவித்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் யுஸ்வேந்திர சாஹலும் அர்ஷ்தீப் சிங்கும் அபாரமாக செயல்பட்டனர். இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். குல்தீப் யாதவ், பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நன்றாக பந்து வீசியும் அறிமுக போட்டியில் முகேஷ் குமாருக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் பேட்டிங் வரிசை மெதுவாக சரிந்தது. இடையில் திலக் வர்மா அபாரமாக பேட்டிங் செய்து 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். களமிறங்கிய இரண்டாவது, மூன்றாவது பந்துகளில் தொடர்ந்து இரண்டு சிக்சர்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி மளமளவென 9 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பேட்டிங் அனுபவம் அற்ற இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் கடுமையாக முயற்சித்தும் தோல்வியை சந்தித்தனர்.