இவரை தேர்வுக்குழு தலைவராகவும், சிறந்த வர்ணனையாளராகவும் அறிந்த இன்றைய ரசிகர்கள் பலருக்கும் இவர் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர் என்பதையும் கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


சேத்தன்சர்மா:


1966ம் ஆண்டு பஞ்சாபில் உள்ள லூதியானாவில் பிறந்தவர் சேத்தன் சர்மா. வலது கை வேகப்பந்துவீச்சாளரான இவர் தன்னுடைய 17வது வயதிலே இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு பெற்றார். தன்னுடைய 19வது வயதிலே இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலே மோஷின்கானை அவுட்டாக்கினார்.




சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஓவரிலே விக்கெட் வீழ்த்திய 3வது இந்தியர் என்ற சாதனையை சேத்தன்சர்மா படைத்துள்ளார். இந்திய அணிக்காக முதல் உலகக்கோப்பையை வென்ற கபில்தேவுடன் இணைந்து 5 ஆண்டுகள் வேகப்பந்துவீச்சில் கூட்டணி அமைத்து வீசியுள்ளார். 1985ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரின்போது 3 டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியபோது இவரை அனைவரும் திரும்பிபார்த்தனர். பின்னர், அடுத்தாண்டே இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


பேட்டிங், பவுலிங்:


டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அசத்தி வந்த சேத்தன்சர்மா 1989ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடிய சேத்தன்சர்மா 1994ம் ஆண்டு வரை விளையாடினார்.




1987ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரூதர்போர்டு, இயான் ஸ்மித், ஈவன் சாட்பீல்ட் ஆகிய மூன்று பேரையும் அடுத்தடுத்து அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.


சிறந்த பந்துவீச்சாளராக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் சேத்தன்சர்மா அசத்தியுள்ளார். 1989ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4வது வீரராக களமிறங்கிய சேத்தன் சர்மா அந்த போட்டியில் 101 ரன்களை விளாசி பிரமிக்க வைத்தார். அதற்கு முன்பாக 1985ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய சேத்தன் சர்மா ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு தலைவலி கொடுத்ததுடன் 2 மணி நேரம் களத்தில் நின்றதுடன் 54 ரன்களை சேர்த்து அசத்தினார்.


கிரிக்கெட் கேரியர்:


1983ம் ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான சேத்தன்சர்மா, 1984ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அக்டோபர் 17-ந் தேதி அறிமுகமானார். 1989ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆடினார். 1994ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் தனது கடைசி ஒருநாள் போட்டியை ஆடினார்.




சேத்தன் சர்மா இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 61 விக்கெட்டுகளையும், 396 ரன்களையும் குவித்துள்ளார். 65 ஒருநாள் போட்டிகளில் ஆடி 67 விக்கெட்டுகளையும், 456 ரன்களையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட்டில் அதிகபட்சமாக 54 ரன்களையும், ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 101 ரன்களையும் எடுத்துள்ளார்.


தேர்வுக்குழு தலைவர்:


சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக மிகவும் புகழ்பெற்றார். பின்னர், ஹரியானாவில் 2004ம் ஆண்டு வேகப்பந்துவீச்சுக்கு என்று ஒரு அகாடமி உருவாக்கினார். கிரிக்கெட் மட்டுமின்றி அரசியலிலும் களமிறங்கிய சேத்தன் சர்மா 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பகுஜன்சமாஜ் சார்பில் களமிறங்கினார். அந்த தேர்தலில் 18.2 சதவீத வாக்குகள் பெற்று 3வது இடமே பிடித்தார். பின்னர், அவர் பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வின் விளையாட்டு பிரிவில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது.


பின்னர், கடந்த 2020ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற யஷ்பால் சர்மாவின் உறவினர்தான் சேத்தன் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.