ஜிம்பாப்வே நாட்டிற்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டி20-யில் தோல்வி அடைந்த இந்திய அணியின் பேட்டிங் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக, ஐ.பி.எல். தொடரில் அசத்திய இளம் வீரர்கள் அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், ரிங்கு சிங் ஆகியோர் மோசமாக ஆடினர்.
மிரட்டல் சதம் விளாசிய அபிஷேக் சர்மா:
இந்த சூழலில், நேற்று ஹராரேவில் நடந்த போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. முதல் டி20-யில் டக் அவுட்டான அபிஷேக் சர்மா நேற்றைய போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்தார். 47 பந்துகளில் 8 பவுண்டரி 7 சிக்ஸருடன் 100 ரன்கள் அடித்து அசத்தினார்.
இளம் வீரரான அபிஷேக் சர்மாவின் அதிரடியான சதத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சதம் அடித்த அபிஷேக் சர்மா கூறியிருப்பதாவது, “ இன்றைய போட்டியில் நான் சுப்மன்கில் பேட்டை வைத்து விளையாடினேன். இதற்கு முன்பும் இவ்வாறு செய்துள்ளேன். எப்போது எல்லாம் எனக்கு ரன்கள் தேவைப்படுகிறேதோ, அப்போது அவரது பேட்டை கேட்பேன்.
எனக்கு இது மிகவும் அழகான ஆட்டம் என்று நினைக்கிறேன். அவர்கள நேற்று எங்களை தோற்கடித்து இருந்தார்கள். நான் இன்றைய நாள் என்னுடைய நாள் என்று உணர்ந்தேன். பயிற்சியாளர்கள, கேப்டன்கள் மற்றும் அணி நிர்வாகம் எனக்கு தன்னம்பிக்கையை தொடர்ந்து அளித்தனர். நான் எப்போதும் எனது திறமையை நம்புவேன்."
இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான ரோகித்சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டியில் இருநது ஓய்வு பெற்றுள்ளதால், புதிய இளம் இந்திய அணியை அணி நிர்வாகம் உருவாக்கி வருகிறது. அந்த வகையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜோரல், சாய் சுதர்சன் என பல இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளனர்.
2018ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் ஆடி வரும் அபிஷேக் சர்மா இதுவரை 63 போட்டிகளில் ஆடி 7 அரைசதங்களுடன் 1377 ரன்களை எடுத்துள்ளார். குறிப்பாக, கடந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: BCCI: உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி - ஒவ்வொரு வீரருக்கும் இத்தனை கோடிகளா? மொத்த லிஸ்ட் இதோ!
மேலும் படிக்க: HBD Ganguly: உலக கிரிக்கெட்டின் தாதா! தோனி, கோலி, ரோகித்துக்கு முன்னோடி! ஹாப்பி பர்த்டே கங்குலி!