உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழ்வது இந்திய கிரிக்கெட் அணி. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணி படைத்துள்ள சாதனைகளின் பட்டியல் அளப்பரியது. இந்திய அணியின் இந்த அபார வளர்ச்சிக்கு பின்னால் நூற்றுக்கணக்கான வீரர்களின் உழைப்பு உள்ளது.


கொல்கத்தா இளவரசன் கங்குலி:


இன்று கிரிக்கெட் பார்க்கும் பதின்ம வயது இளைஞர்கள் தோனியின் வியூகம், கோலியின் ஆக்ரோஷம், ரோகித் சர்மாவின் அதிரடியை பார்த்திருப்பார்கள். ஆனால், இது அனைத்தும் கலந்த கலவையாக 2000ம் காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியை உலக கிரிக்கெட் அரங்கில் வழிநடத்தியவர் சவ்ரவ் கங்குலி. அவருக்கு இன்று 52வது பிறந்தநாள்.


கபில்தேவிற்கு பிறகு இந்திய அணி சிறந்த கேப்டன் இல்லாமல் தடுமாறிக் கொண்டு இருந்தது. அசாருதீன் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய பிறகு சச்சின் கைக்கு கேப்டன்சி சென்றது. ஆனால், கிரிக்கெட்டின் கடவுளான சச்சினால் கேப்டனாக ஜொலிக்க முடியவில்லை. இதனால், கொல்கத்தாவின் இளவரசன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட கங்குலியின் கைக்கு கேப்டன்சி சென்றது.


இளம் ரத்தம் பாய்ச்சிய கங்குலி:


கோலிக்கு கேப்டன்சி கொடுத்தபோது அவர் ஆக்ரோஷமானவர் என்று விமர்சனங்கள் உருவானது போலவே, கங்குலியிடமும் கேப்டன்சியை ஒப்படைக்கப்பட்டபோது விமர்சனங்கள் உருவானது. ஆனால், அதே ஆக்ரோஷமும், உத்வேகமும்தான் அவரது கேப்டன்சிக்கு பக்கபலமாக துணை நின்றது.


கேப்டனாக களமிறங்கியது முதலே அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்த கங்குலி, இந்திய அணிக்கு பல இளம் ரத்தங்களை பாய்ச்சினர். அனுபவ வீரரான சச்சின் டெண்டுல்கரை மட்டும் அணியில் வைத்துக் கொண்டு சேவாக், யுவராஜ், அஜித் அகர்கர், ஜாகீர் கான், முகமது கைஃப், ஆஷிஷ் நெஹ்ரா, இர்பான் பதான், ஹர்பஜன்சிங், லட்சுமிபதி பாலாஜி என இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தார்.


இந்திய கிரிக்கெட்டின் தாதா:


இன்று உலகமே போற்றும் தலைசிறந்த கேப்டன், தலைசிறந்த ஃபினிஷர், தலைசிறந்த பேட்ஸ்மேன் என கொண்டாடப்படும் தோனியை இந்திய அணிக்குள் கொண்டு வந்தவர் கங்குலிதான். களத்தில் துணிச்சலான முடிவுகளை எடுப்பதுடன், எதிரணியின் விமர்சனங்களுக்கு துணிச்சலாக பதிலடி தருவதாலே ரசிகர்ளால் தாதா என்று அழைக்கப்பட்டார்.


2005ம் ஆண்டு இந்தியா வந்திருந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 4வது ஓவரிலே சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை இழக்க, கங்குலியே களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நேரத்தில் இளம் வீரரான தோனியை ஒன் டவுன் வீரராக களமிறக்கினார். ரசிகர்களுக்கு பெரிதும் பரீட்சயமே இல்லாத தோனி அந்த போட்டியில் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசி 148 ரன்களை அதிரடியாக குவித்தார். அதுதான் தோனியை இந்திய ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் எதிர்பார்க்காத முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவதில் கங்குலிக்கு நிகர் கங்குலியே என்பதற்கு அதுவே ஒரு சான்றாகும்.


கேப்டன்சியில் அசத்தல்:


இது மட்டுமின்றி தோனிக்கு முன்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாக பார்த்தீவ் படேல், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கினார். கங்குலியால் அறிமுகப்படுத்தப்பட்ட சேவாக், யுவராஜ், ஜாகிர்கான், முகமது கைஃப், நெஹ்ரா, தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்பஜன்சிங் ஆகிய அனைவரும் ஜாம்பவான் வீரர்களாகவே உலா வந்தனர்.


1999ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை கேப்டனாக பொறுப்பு வகித்த கங்குலி 146 ஒருநாள் போட்டிகளில் 76 போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் இந்த வெற்றி என்பது அசாத்தியமானது ஆகும். மினி உலகக்கோப்பையை வென்றுத் தந்த கங்குலி, 2003ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றது அவரது கேப்டன்சியில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.


ஏனென்றால், அன்றைய காலத்தில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீழ்த்தவே முடியாத அணியாக உலா வந்தது. அந்த அணிக்கு எதிராக இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதே மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஒருநாள் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளிலும் கங்குலி சிறந்த கேப்டனாகவே செயல்பட்டுள்ளார். 2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை 49 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பு வகித்து 21 வெற்றி பெற்றுள்ளார். 15 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. 13 டெஸ்ட் தோல்வி அடைந்துள்ளது. அந்நிய மண்ணில் டெஸ்ட் வெற்றி பெற்றது கங்குலி கேப்டன்சியில் மிகப்பெரிய சாதனை ஆகும்.


ரிவெஞ்ச் மன்னன்:


இந்திய மண்ணில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் வெற்றியை கொண்டாட டீ சர்ட்டை கழற்றி சுழற்றிய பிளின்டாபிற்கு தக்க பதிலடி தரும் விதமாக, இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு கங்குலி டீ சர்ட்டை கழற்றி சுற்றியது இன்று வரை கிரிக்கெட் ரிவெஞ்ச் வரலாற்றில் முதன்மையாக உள்ளது.


கேப்டனாக அசத்திய கங்குலி வீரராக மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளார்.  113 டெஸ்ட் போட்டிகள் ஆடி 16 சதங்கள், 35 அரைசதங்கள், 1 இரட்டை சதம் விளாசி 7 ஆயிரத்து 212 ரன்கள் எடுத்துள்ளார். 311 ஒருநாள் போட்டிகளில் ஆடி 22 சதங்கள், 72 அரைசதங்களுடன் 11 ஆயிரத்து 363 ரன்கள் விளாசியுள்ளார். இதுதவிர தனது கேரியரின் கடைசி கட்டத்தில் 59 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 7 அரைசதங்களுடன் 1349 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ரன்களை எல்லாம் அவர் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், ஜேக் காலீஸ், பிரெட் லீ, மெக்ராத், ஷேன் வார்னே, பொல்லாக், ஆலன் டொனால்ட், ஷேன் பாண்ட், கெயின்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ் என உலகின் ஜாம்பவான்களை எதிர்கொண்டு எடுத்த ரன்கள் ஆகும்,


கேப்டனாக ஜொலித்த கங்குலி இந்திய அணியின் பயிற்சியாளராக வந்த சேப்பலுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். அதன்பின்பு, அணிக்கு திரும்பிய கங்குலி 2008ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், பி.சி.சி.ஐ.யின் தலைவராகவும் பதவி வகித்தார். இடது கை பேட்ஸ்மேனான கங்குலியின் ஆக்ரோஷமான கேப்டன்சி, அணுகுமுறையும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்ததும் இந்திய அணி இன்று இந்த உயரத்திற்கு வளர்ந்து நிற்பதற்கு மிக மிக முக்கியமான காரணம் ஆகும்.