BCCI: உலகக் கோப்பையை வென்றதற்காக பிசிசிஐ அறிவித்த பரிசு, வீரர்களுக்கு எப்படி பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
பிசிசிஐ அளித்த ரூ.125 கோடி பரிசு:
அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வென்று, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் 17 ஆண்டுகளாக டி20 உலகக் கோப்பையை வெல்லவில்லை, 11 ஆண்டுகளாக எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்ற இந்திய ரசிகர்களின் ஏக்கம் முடிவுக்கு வந்தது. இந்த மகத்தான சதனையை படைத்ததற்காக, இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் பரிசாக வழங்கி கவுரவித்தது.
ஒவ்வொரு வீரருக்கும் இத்தனை கோடிகளா?
பிசிசிஐ அறிவிக்கப்பட்ட பரிசு வீரர்களிடையே எப்படி பகிர்ந்தளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் அதுதொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, உலகக் கோப்பைக்கான அணியில் இருந்த 15 பிரதான வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் டிராவிட் ஆகியோருக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும். பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த மற்றவர்களுக்கு தலா 2.5 கோடி ரூபாயும், மற்ற ஊழியர்களுக்கு தலா 2 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டு இருந்த கில் உள்ளிட்டோருக்கு தலா ஒரு கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்த வீரர்கள்:
ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், யஷஷ்வி ஜெய்ஷ்வால்
மாற்று வீரர்கள்:
சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்
தலைமைப் பயிற்சியாளர் - ராகுல் டிராவிட்
இறுதிப்போட்டியில் அசத்திய இந்தியா:
இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 176 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 15 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்கா நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என்ற சூழலே நிலவியது. ஆனால், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 2007ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது.