இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று வகை கிரிக்கெட்டில் விளையாடு வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகள் ஏற்கனவே முடிந்து விட்டது. இதில் இந்திய அணி முதல் போட்டியையும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது போட்டியையும் வென்றது. இந்நிலையில் மூன்றாவது போட்டி ட்ரைனிடாட் பகுதியில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக 7 மணிக்கு டாஸ் போடப்படும்.
முதல் ஒருநாள் போட்டி
முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கேப்டன் ஹோப் மட்டும் 49 ரன்கள் சேர்த்தார். மற்ற யாரும் சிறப்பாக சோபிக்காததால் 23 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் வெற்றிக்கான வாய்ப்பை பிரகாசமாகத்தான் வைத்திருந்தது. இறுதியில் இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது ஒருநாள் போட்டி
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தினார். சீனியர் ப்ளேயர்களான ரோகித் சர்மா, விரோட் கோலி இந்த போட்டியில் விளையாடவில்லை. இந்திய அணி பேட்டிங் செய்வதால் அதிரடியான ஆட்டத்தை இந்திய அணி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, அவர்களுக்கு ஒட்டுமொத்த இந்திய அணியும் அல்வா கொடுத்தது என்று சொல்லும் அளவிற்குதான் பேட்டிங் இருந்தது. குறிப்பாக இந்திய அணி வீரர்கள் மத்தியில் பொறுப்பான ஆட்டத்தை பார்க்க முடியவில்லை. முதல் போட்டியில் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் சிறப்பான முறையில் கம்பேக் கொடுத்து அசத்தினர். இறுதியில் இந்திய அணி 40.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 181 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால், இரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாகச் செல்லும் எனவும், ரோகித் மற்றும் விராட் அணிக்கு திரும்புவார்கள் எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.