நடப்பாண்டு ஆஷஷ் தொடரின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 2-2 என சமன் செய்தது.
ஆஷஷ் தொடர்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி, வரலாற்றுச் சிறப்புமிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஷ் தொடரில் பங்கேற்றது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுதிய அந்த அணி, முதல் இரண்டு போட்டிகளையும் வென்று 2-0 என முன்னிலை வகித்தது. இதனால், 2001ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி ஆஷஷ் தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.
மல்லுக்கட்டிய இங்கிலாந்து:
ஆனால், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி விடாமல் தொடரை சமன் செய்ய தீவிரம் காட்டியது. 3வது போட்டியில் அந்த அணி வெல்ல வாய்ப்பு இருந்தும் மழை குறுக்கிட்டதால் போட்டி சமனில் முடிந்தது. தொடர்ந்து நான்கவாது போட்டியில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி வெற்றி வாகை சூடியது. இருப்பினும், 1-2 என பின் தங்கியிருந்த இங்கிலாந்து அணி, கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் நோக்குடன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் களமிறங்கியது.
முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:
போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணியின் ஹாரி புரூக் 85 ரன்கள் குவித்தார். இதையடுத்து களமிறங்கிய ஆச்திரேலிய அணி, 295 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 75 ரன்களை சேர்த்தார்.
இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ்:
12 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜோ ரூட் 91 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்களும் மற்றும் சாக் கிராவ்லே 73 ரன்களும் குவிக்க அந்த அணி, 395 ரன்கள் குவித்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 384 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா அபாரம்:
இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், கவாஜா ஜோடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. இருவரும் அரைசதம் விளாச நான்காம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலிய அணி 135 ரன்களை குவித்து இருந்தது. வெற்றிக்கு இன்னும் 249 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் 5ம் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது.
வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா:
அணியின் ஸ்கோர் 140 ஆக இருந்தபோது வார்னர் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து உஸ்மான் கவாஜா 72 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய லாபுசக்னே 13 ரன்னில் வெளியேறினார். நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் டிராவிஸ் ஹெட் நிதானமாக விளையாடி சரிவில் இருந்து மீட்டனர். இதனிடையே, மழை குறுக்கிட்டபோது கைவசம் 7 விக்கெட்டுகளை வைத்திருந்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வெறும் 134 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
மிரட்டி விட்ட இங்கிலாந்து:
ஆனால் போட்டி மீண்டும் தொடங்கியபோது ஹெட் 43 ரன்களிலும், ஸ்மித் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்கள்ல் நடையை கட்டினர். இதனால், 334 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலிய அணி, கையில் இருந்த வெற்றியை இங்கிலாந்து அணிக்கு தாரைவார்த்தது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மொயீன் அலி 3 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராடு 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால், 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தொடரை 2-2 என சமன் செய்தது. இந்த வெற்றியுடன், அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால், 2001ம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற மோசமான சாதனையை அந்த அணி இன்னும் தொடர்கிறது.