ஆகஸ்ட் 18 முதல் அயர்லாந்தில் தொடங்கும் மூன்று டி20 தொடருக்கான இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 


கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டி20 தொடருக்கு பிறகு பும்ரா எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்ட அவர், தற்போது மீண்டும் கிட்டதட்ட ஒராண்டுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். 


அடுத்த மாதம் அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரிதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஐபிஎல் தொடரில் அபாரமாக ஆடிய ரிங்கு சிங்கிற்கு இறுதியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜிதேஷ் சர்மாவுக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. பும்ராவை தொடர்ந்து காயத்தில் இருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி நீண்ட நாட்களுக்கு பிறகு சிவம் துபே நம்பிக்கை நட்சத்திரமாக இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். 


அனுபவ வீரர்களுக்கு ஓய்வு..?


அயர்லாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 23ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் டி20 போட்டி 18ம் தேதியும்,  இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 20 அன்று நடைபெறும். தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பையை கருத்தில் கொண்டு, அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து அனைத்து அனுபவ வீரர்களுக்கும் ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.


இதையடுத்து, இந்திய அணியின் நிரந்தர கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 


அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய T20I அணி : ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது , ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான்


கே.எல்.ராகுல் - ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை: 


கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது, ​​இந்த இரண்டு வீரர்களும் ஆசிய கோப்பைக்கு இருப்பார்களா என்பது குறித்து பிசிசிஐ தரப்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.