உலககோப்பைத் தொடர் நிறைவு பெற்ற கையுடன் நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடைபெற்று வரும் டி20 போட்டிகளில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் போட்டியிலும், ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.




இந்த நிலையில், உலகப்புகழ் பெற்ற கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்டதால் இந்திய அணி எந்தவித பதட்டமும் இல்லாமலே ஆடும். அதேபோல, தொடரை இழந்துவிட்டதால் நியூசிலாந்து அணியும் எந்தவித பதட்டமும் இல்லாமல் ஆடுவார்கள். அதேநேரத்தில், இன்றைய போட்டியிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்று இந்தியாவும், இந்த போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்று நியூசிலாந்து அணியும் முனைப்புடன் ஆடுவார்கள்.


இந்திய அணியைப் பொறுத்தவரை ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் கூட்டணியை நம்பிதான் இந்திய அணியே உள்ளது என்பது கடந்த இரு போட்டிகளிலும் அப்பட்டமாக தெரிந்தது. அவர்கள் ஆட்டமிழந்த பிறகு இலக்கு பெரியளவில் இல்லாதபோதே, இந்தியாவின் மிடில் ஆர்டர் மிகவும் தடுமாறுகிறது. ஆனால், நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில், டேரில் மிட்செல் மட்டுமின்றி மிடில் ஆர்டர் வீரர்களும் நன்றாக பேட்டிங் செய்கின்றனர்.




இதுவரை பார்மில் இல்லாமல் தவித்து வந்த கிளென் பிலிப்ஸ் கடந்த போட்டி மூலம் பார்மிற்கு திரும்பினார். அவருடன் சாப்மன், விக்கெட் கீப்பர் செய்ப்ரட்டும் பேட்டிங்கில் அசத்தினால் நியூசிலாந்து வீரர்கள் மிகப்பெரிய இலக்கை அடிக்க வாய்ப்புள்ளது.


இந்திய அணியில் புவனேஷ்குமாருடன் ஐ.பி.எல். மற்றும் கடந்த போட்டியில் அசத்திய ஹர்ஷல் படேல் வேகத்தில் நியூசிலாந்து வீரர்களுக்கு மிகப்பெரும் தலைவலியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். சுழலில் ரவிச்சந்திர அஸ்வினும், அக்‌ஷர் படேலும் கட்டுக்கோப்பாக வீசி வருகின்றனர்.




இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்டதால் இந்திய அணி இந்த போட்டியில் பரிசோதனை முயற்சியை செய்துபார்க்க வாய்ப்புகள் தாராளமாக உள்ளது. இதுவரை வாய்ப்புகள் கிடைக்காமல் பெஞ்சிலே உள்ள இஷான்கிஷான், ருதுராஜ் கெய்க்வாட, ஆவேஷ்கான், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு ஆடும் லெவனில் வாய்ப்புகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கலாம். நியூசிலாந்து அணியில் பெரியளவில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். கொல்கத்தாவில் இன்று நடைபெறும் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண