கிரிக்கெட் உலகின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்பவர் ட்வெய்ன் பிராவோ. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி வரும் அவருக்கு தற்போது 38 வயதாகிறது. இந்நிலையில், இந்த உலகக்கோப்பையோடு சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக பிராவோ அறிவித்திருக்கிறார். நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பிறகு அரை இறுதிக்கு பெறும் வாய்ப்பை இழந்து சூப்பர் 12 சுற்றோடு வெளியேற உள்ளது. 


க்ரூப்:1-ல் இடம் பிடித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது கடைசி போட்டியில் இன்று விளையாட உள்ளது. சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் பிராவோவுக்கு இதுவே கடைசிப்போட்டி. கடந்த 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த பிராவோ, பின்பு மீண்டும் டி-20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாட இருப்பதாக தெரிவித்தார்.  வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 7 டி-20 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கும் பிராவோ, 2012, 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பகளை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்ற முக்கிய பங்காற்றி இருக்கிறார்.



தனது ஓய்வு அறிவிப்பு குறித்து பேசிய பிராவோ, “சரியான நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். கிரிக்கெட்டில் நல்ல பயணம் கிடைத்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை பார்த்துள்ளேன். ஆனால், அவற்றை திரும்பி பார்க்கும்போது என் நாட்டு மக்களுக்காக நான் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன் என பெருமை கொள்கிறேன். மேற்கிந்திய தீவுகள் அணியில் தற்போதுள்ள வீரர்கள், சர்வதேச அளவில் நாட்டின் பெருமையை நிலைநிறுத்தக்கூடியவர்கள். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன். நாங்கள் டி20 உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிவிட்டோம். நாங்கள் எதிர்பார்த்தபடி இந்தாண்டு அமையவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்கமாட்டோம். ஏனென்றால், போட்டி அவ்வளவு கடினமாக இருந்தது. சோர்வடைய மாட்டோம்.” என தெரிவித்திருக்கிறார்.


பிராவோவிற்கு இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களின் ஒருவரான அவர், யெல்லோ ஆர்மியின் சாம்பியன் வீரர். அவர் ஐ.பி.எல். போட்டிகளில் இதுவரை 151 போட்டிகளில் ஆடி 1537 ரன்களையும், 167 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். ஒரு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் ப்ராவோ தன்வசம் வைத்துள்ளார். பிராவோவின் ஓய்வு மேற்கிந்திய தீவு ரசிகர்கள் மட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சோஷியல் மீடியாவில் நெகிழ்ச்சியான பதிவுகளை ஷேர் செய்து வழியனுப்பும் நிகழ்ச்சியை அரங்கேற்றி வருகின்றனர்


இந்நிலையில், இன்று  பிராவோ தனது கடைசி டி-20 போட்டியில் விளையாட இருக்கிறார். இந்த போட்டி அபு தாபியில் மதியம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண