டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில், இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்நிலையில், துபாய் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.
இந்த உலகக்கோப்பை தொடரில், முதல் இரண்டு போட்டிகளை இழந்திருந்த இந்திய அணி, கடைசியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்று, இன்று ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியிலும் இனி வரும் போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணிக்கு, இன்றைய வெற்றி, அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்து கொள்வதற்கான நம்பிக்கையை தருகிறது. 7.1 ஓவர்களுக்குள் போட்டியை முடித்தால், 2 புள்ளிகள் கிடைப்பதோடு ரன் ரேட்டிலும் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.
இதனால், 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது ராகுல் - ரோஹித் இணை. வெறும் 4 ஓவர்களில் 2 சிக்சர்கள்,8 பவுண்டரிகள் என தெறிக்கவிட்டது இந்த இணை. 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வீல் பந்துவீச்சில் எல்பிடபிள்யூவாகி அவுட்டானார் ரோஹித். அவரைத் தொடர்ந்து அரை சதம் கடந்த ராகுல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், வின்னிங் ஷாட் அடிக்க கோலி - சூர்யகுமார் யாதவ் இணை களத்தில் நின்றது.
இதனால், நடப்பு உலகக்கோப்பையின் அதிவேக 50 ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது இந்தியா. மேலும், 6.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது இந்திய அணி. இதன் மூலம் 2 புள்ளிகள் பெற்ற இந்திய அணி, ரன் ரேட்டிலும் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகளை முந்தியுள்ளது. இனி நடக்க இருக்கும் கடைசி போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாலும், ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தினாலும் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு உறுதியாகும். கடைசி நேர பரபரப்பும், நம்பிக்கையும் ஒன்று சேர இந்திய அணி ரசிகர்கள் இனி வரும் போட்டிகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியின் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினர் இந்திய பவுலர்கள். இந்திய பவுலர்களைப் பொருத்தவரை முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால், 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஸ்காட்லாந்து அணி 85 ரன்கள் எடுத்தது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்