உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆட உள்ளன. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி  டோமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க்கில் வரும் 12-ந் தேதி தொடங்க உள்ளது.


வெஸ்ட் இண்டீஸ் அணி:


இந்த தொடருக்காக ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் சென்றுவிட்ட இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ராத்வெய்ட் (கேப்டன்), ஜெர்மென் ப்ளாக்வுட் ( துணை கேப்டன்), அலிக் அதானஜே, தாகெனெரின் சந்தர்பால், ரஹீம் கார்ன்வெல், ஜோசுவா டி சில்வா, ஷனோன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப், கிர்க் மெக்கென்சி, ரேமன் ரைஃபர், கீமர் ரோச், ஜோமல்  வாரிகன். ரிசர்வ்ட் வீரர்கள் ( தெவின் இம்லாச், அகீம் ஜோர்டன்).


13 வீரர்கள் மற்றும் 2 ரிசர்வ்ட் வீரர்கள் அடங்கிய இந்த அணியில் இடது கை வீரர் கிரிக் மெக்கென்சி மற்றும் அலிக் அதானஜே ஆகிய வீரர்கள் முதன்முறையாக வாய்ப்பு பெற்றுள்ளனர். வங்காளதேசம் ஏ அணிக்கு எதிரான தொடரில் இருவரும் சிறப்பாக ஆடியதில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. காயம் காரணமாக குடகேஷ் மோதிக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.






உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:


2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்த பிறகு தொடங்கும் டெஸ்ட் தொடர் என்பதால், 2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்த போட்டிகளின் வெற்றி, தோல்வி விகிதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியும், டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உலகக்கோப்பைக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற தகுதிச்சுற்றுடன் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் தங்களை முழுமையாக கட்டமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில், தனது சொந்த மண்ணில் பலமிகுந்த இந்தியாவை எதிர்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி முழு பலத்துடன் போராட வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: HBD Souvrav Ganguly: ஆக்‌ஷன்.. அதிரடி.. அதகளம்..! கிரிக்கெட்டில் தனி ராஜாங்கம் நடத்திய 'தாதா' கங்குலி..!


மேலும் படிக்க: HBD MS Dhoni: தோனி ஏன் மாஸ்டர் மைண்ட்? முக்கியமான போட்டிகளில் தோனி எடுத்த எதிர்பாராத, வெற்றிகரமான 5 முடிவுகள்!