கபில்தேவின் வருகைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி உலக ஜாம்பவான் அணிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் உருமாறியது. 90-களின் இறுதியில் இந்திய அணி மீண்டும் பல்வேறு சவால்களையும் நெருக்கடிகளையும் சந்தித்தது. அசாருதின் கேப்டன்சிக்கு பிறகு மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அணியை வழிநடத்தினார்.


கேப்டன் கங்குலி:


பேட்ஸ்மேனாக மைதானத்தில் கோலோச்சிய சச்சினால் கேப்டனாக கோலோச்ச முடியவில்லை. கேப்டன்சி அவரது பேட்டிங் திறமையையும் மிக கடுமையாக பாதிப்பதாக சச்சின் உணர்ந்ததால் புதிய கேப்டனை தேட வேண்டிய கட்டாயத்திற்கு அணி நிர்வாகம் உள்ளானது. புதிய கேப்டனை நியமிக்கும் வரை அஜய் ஜடேஜா 13 போட்டிகள் கேப்டனாக இருந்தார.


சூதாட்ட புகார் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்திய அணி திணறிக் கொண்டிருந்த சமயத்தில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டவர்தான் கங்குலி. இன்று கேப்டன்சியின் தோனி, விராட்கோலி, ரோகித் என்று ரசிகர்கள் ஒவ்வொருவர் பெயரையும் உச்சரித்துக் கொண்டிருக்கும் சூழலில், 2000 காலகட்டத்தில் இந்திய ரசிகர்கள் கேப்டன் என்றாலே ஒருசேர உச்சரித்தது கங்குலியின் பெயரைத்தான்.


வெற்றியுடன் தொடக்கம்:


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கொச்சியில் 1999ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில்தான் கங்குலி இந்திய அணிக்காக முதன்முறையாக கேப்டனாக களமிறங்கினார். அந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா கிறிஸ்டன், கிப்ஸ் சத உதவியுடன் 301 ரன்களை குவித்தது. 2000- கால கட்ட கிரிக்கெட்டை பார்த்தவர்களுக்கு அன்று ஒருநாள் போட்டியில் 300 ரன்கள் என்பது எவ்வளவு சவாலான இலக்கு? என்பது நன்றாகவே தெரியும்.


அந்த போட்டியில் தொடக்க வீரராக இறங்கிய கங்குலி 31 ரன்கள், சச்சின் 26 ரன்கள் எடுக்க ராகுல் டிராவிட், சுனில் ஜோஷி ஏமாற்ற அசாருதின் 42 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அசத்திய அஜய் ஜடேஜா 92 ரன்கள் குவிக்க இந்திய அணி 2 பந்துகள் மீதம் வைத்து அபார வெற்றி பெற்றது. கேப்டனாக முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய கங்குலிக்கு தொட்டதெல்லாம் வெற்றி என்றே அமைந்தது.


தோனியை அறிமுகம் செய்த கங்குலி:


தோனியை எப்படி வியூகம் அமைத்து வீழ்த்துவதற்கும், கோலியை ஆக்ரோஷத்திற்கும் உதாரணமாக கூறுகிறோமோ அதேபோல, கங்குலி இரண்டும் கலந்த கலவையாக திகழ்ந்தார். குறிப்பாக, அணியை இளம் வீரர்கள் பட்டாளமாக புது ரத்தமாக மாற்றியதில் கங்குலியின் பங்கு அளப்பரியது.


இந்திய அணியில் வேறு எந்த கேப்டனும் செய்ய முடியாத அளவிற்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்தார். நாம் வியந்து பார்க்கும் ஜாம்பவான்கள் சேவாக், யுவராஜ், வி.வி.எஸ். லட்சுமணன், ஹர்பஜன்சிங், ஜாகிர்கான், முகமது கைஃப், நெஹ்ரா, பாலாஜி என்று பலரையும் அணிக்குள் கொண்டு வந்து இந்திய அணியின் ஏறுமுகத்திற்கு காரணமாக அமைந்தார்.


சாதனைகள்:


குறிப்பாக, இந்திய அணிக்காக 3 உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனியை இந்திய அணிக்காக அறிமுகப்படுத்தியதே கங்குலிதான் ஆகும். பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கும் அணியில் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிய கங்குலி, அந்த இடத்திற்கு தோனி மிகச்சிறந்த தேர்வு என்பதை உணர்ந்த பிறகு அவரை அணியில் நீடித்து இருக்கச் செய்தார்.


எப்போதும் புதிய முயற்சிகளை நெருக்கடியான சூழலில் எடுப்பதில் தைரியம் மிகுந்த கங்குலி, 2005ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் 4வது ஓவரிலே சச்சின் அவுட்டான பிறகு அனைவரும் கங்குலியே களமிறங்குவார் என்று எதிர்பார்த்த தருணத்தில், யாருமே அறிந்திடாத ஒரு முடி வைத்த இளம் வீரனாக தோனியை ஒன் –டவுன் வீரராக களமிறக்கினார்.


மைதானமே இந்த பையன் யார்? என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் நான்தான் தோனி என்று தோனியும் சிக்ஸர், பவுண்டரி என விளாசி 148 ரன்களை குவித்தார். அப்படி நாயகர்களை உருவாக்குவதில் கங்குலிக்கு நிகர் கங்குலி மட்டுமே. யாராலும் வீழ்த்த முடியாத அணியாக உலா வந்த ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி தந்தது, வெளிநாட்டு மண்ணில் அசத்தியது, மினி உலகக்கோப்பையை வென்றது என்று கங்குலி தலைமையில் செய்த சாதனைகள் ஏராளம்.


2003ம் ஆண்டு இறுதிப்போட்டி:


இந்திய அணியின் கேப்டனாக 1999ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த கங்குலி 146 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 76 போட்டிகளில் வெற்றியையும், 65 போட்டிகளில் தோல்வியையும் கண்டுள்ளார். அவரது வெற்றியிலே 2003ம் ஆண்டு இந்திய அணியை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றது மிகப்பெரிய சாதனை ஆகும்.  ஏனென்றால், அன்றைய கால கட்ட ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவது என்பது அசாதாரணமான ஒன்று ஆகும். அப்பேற்பட்ட அணிக்கு எதிராக இறுதிப்போட்டி வரை இந்திய அணியை கங்குலி அழைத்துச் சென்றதே மிகப்பெரிய செயலாகவே ரசிகர்களால் கருதப்படுகிறது.


1992ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான கங்குலி 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7212 ரன்களை எடுத்துள்ளார். அதில் 16 சதங்கள், 35 அரைசதங்கள் அடங்கும். 311 ஒருநாள் போட்டிகளில் ஆடி 22 சதங்கள், 72 அரைசதங்களுடன் 11363 ரன்கள் எடுத்துள்ளார். மித வேகப்பந்து வீச்சாளரான கங்குலி டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


மைதானத்தில் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு தனி ராஜ்ஜியம் நடத்திய கங்குலியை கொல்கத்தாவின் இளவரசர், தாதா என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர். இந்திய அணி கேப்டன், பி,சி.சி.ஐ. தலைவராக உலா வந்த அந்த தாதாவிற்கு இன்று 51வது பிறந்தநாள். ரசிகர்களுடன் ரசிகர்களாக நாமும் வாழ்த்துவோம்.