டிஎன்பிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி, கோவை முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 


டிஎன்பிஎல் தொடர்:


கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கிய நடப்பாண்டிற்கான டின்பிஎல் தொடர் பரபரப்பான பிளே-ஆஃப் சுற்றை எட்டியுள்ளது. 28 லீக் போட்டிகளின் முடிவில் கோவை, திண்டுக்கல், நெல்லை மற்றும் மதுரை ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதனை தொடர்ந்து பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்கின.


கோவை - திண்டுக்கல் மோதல்:


பிளே-ஆஃப் சுற்றில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த கோவை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள எஸ்.சி.எஃப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.


அதிரடியான பேட்டிங்:


இதையடுத்து களமிறங்கிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பொறுப்புடன் விளையாடிய சச்சின் அரைசதம் கடந்து 70 ரன்களை குவித்தார். அவருக்கு பக்க பலமாக விளையாடிய முகிலேஷ் 44 ரன்களை சேர்த்தார். 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் 82 ரன்கள் சேர்த்தனர்.  திண்டுக்கல் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சுபோத் பதி 4 விக்கெட் வீழ்த்தினார்.


பேட்டிங்கில் சரிந்த திண்டுக்கல்:


தொடர்ந்து களமிறங்கிய திண்டுக்கல் அணி, சிறப்பான தொடக்கம் அமையாமல் தடுமாறியது. முன்கள வீரர்களில் பூபதி மற்றும் கேப்டன் பாபா அபரஜித்தை தவற மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய சரத்குமார், 26 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். ஆனால், மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்காததால், திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்களை மட்டுமே சேர்த்து, 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்த வெற்றின் மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள், முதல் அணியாக லைகா கோவை கிங்ஸ் நுழைந்தது.


எலிமினேட்டர் -1:


இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் எலிமினேட்டர் போட்டியில், புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4வது இடங்களை பிடித்த நெல்லை மற்றும் மதுரை அணிகள் மோத உள்ளன.மாலை 7.15 மணிக்கு சேலத்தில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் அணியுடன் மோதும். அதேநேரம், இன்றைய போட்டியில் தோல்வியுறும் அணி தொடரிலிருந்து வெளியேறும். நடப்பு தொடரில் தலா 7 போட்டிகளில் விளையாடிய நிலையில், நெல்லை அணி 5 வெற்றிகளையும், மதுரை அணி 4 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. இரு அணிகளும் லீக் சுற்றில் நேருக்கு நேர் மோதிய போட்டியில், நெல்லை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.