பெங்களூரு ஜஸ்ட் கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபியின் காலிறுதி ஆட்டத்தில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக மேற்கு வங்காள அணியில் களமிறங்கிய முதல் 9 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். 


பெங்களூர் ஜஸ்ட் கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் முதலில் டாஸ் செய்த ஜார்கண்ட் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் மேற்கு வங்காள அணி பேட்டிங்கில் களமிறங்கியது. மேற்கு வங்காள அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தனர், அதற்கு முன்பு அபிஷேக் ராமன் 41 ரன்களில் காயம் அடைந்தார். அபிமன்யு ஈஸ்வரன் பின்னர் சுதிப் குமார் கராமியுடன் இணைந்தார். ஈஸ்வரன் 124 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 65 ரன்கள் எடுத்து 40வது ஓவரில் அவுட்டானார்.


பின்னர் அனுஸ்துப் மஜும்தாருடன் கராமி ஜோடி சேர்ந்து 429 பந்துகளில் 243 ரன்கள் சேர்த்தனர். மஜும்தார் 111வது ஓவரில் 194 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார். காயம் காரணமாக வெளியேறிய அபிஷேக் ராமன் மீண்டும் கிரீஸுக்கு வந்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்து 61 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கராமி 380 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 186 ரன்கள் எடுத்தார்.


மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சரான மனோஜ் திவாரியும் 173 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகள் அடித்து 73 ரன்களில் வெளியேற, விக்கெட் கீப்பர் அபிஷேக் போரல் 111 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆறாவது இடத்தில் அவுட் ஆனார். 






அதன்பிறகு ஷாபாஸ் 124 ரன்களில் 78 ரன்கள் எடுத்து நடையைக்கட்ட, சயன் சேகர் மண்டல் மற்றும் ஆகாஷ் தீப் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் சேர்த்தனர். சயன் 53 ரன்கள் எடுத்த நிலையில், ஆகாஷ் தீப் 18 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் குவித்து அசத்தினார். 


218. 4 ஓவர்களில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு வங்காள அணி 7 விக்கெட் இழப்பிற்கு 773 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. 


இதன்மூலம் முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் முதல் ஒன்பது பேட்ஸ்மேன்கள் குறைந்தபட்சம் ஐம்பது ரன்கள் எடுத்தது இதுவே முதல் முறை. இதற்கு முன், இந்த நிகழ்வு 1893 இல் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கு எதிராக எட்டு ஆஸ்திரேலிய பேட்டர்கள் அரைசதம் அடித்தபோதுதான் நடந்தது, இருப்பினும், அந்த எட்டு பேர் முதல் எட்டு பேட்ஸ்மேன்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண