ஆசிய கோப்பை தொடர் குறித்த சர்ச்சைகள் ஒருவழியாக முடிவுக்கு வருவது போன்ற அறிகுறிகளைக் காட்டுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது சொந்த நாட்டில் போட்டியை நடத்துவதில் உறுதியாக உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 'பாதுகாப்பு சிக்கல்கள்' காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பாததால் பல சிக்கல்கள் உள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் ஆசிய கிரிக்கெட் போர்டிற்கும் ஜெய் ஷா தலைவராக உள்ள நிலையில், ஆசியக்கோப்பை நடத்துவதில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
இதனை எதிர்த்து பாகிஸ்தான் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பேசி வருகிறது. முதலில் ஹோஸ்டிங் உரிமையை பெற்ற பாகிஸ்தானிற்கு இந்தியா செல்லாது என்று ஜெய் ஷா கூறிய நிலையில், பதிலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியா இங்கு வரவில்லை என்றால் பாகிஸ்தான் உலகக்கோப்பைக்கு வராது, இந்தியா பாகிஸ்தான் போட்டி இல்லாமல் நடக்கும் உலகக்கோப்பை எப்படி வருமானம் ஈட்டும் என்று சவால் விடுத்தது. ஒருவழியாக மார்ச் மாதம் முடிவு தெரியும் என்று கூறிய நிலையில் இன்னும் இதற்கான விவாதம் தீர்ந்தபாடில்லை.
இந்தியாதான் வேண்டாம் என்கிறது
இதனை குறித்த உரையாடல் தொடர்கையில், முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி ஒரு பெரிய கூற்றை வெளியிட்டுள்ளார். கடந்த காலத்தில் இந்திய சுற்றுப்பயணத்தின்போது தனது அணி ஒரு இந்தியரால் அச்சுறுத்தப்பட்டதாகவும், ஆனால் அதன் பிறகும் அவர்கள் இங்கு விளையாட முடிவு செய்தனர் என்றும் கூறினார். "ஆசியா கோப்பைக்கு யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள்? இந்தியாதான் வேண்டாம் என்று சொல்கிறது" என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் நடக்கும்போது, ஊடகங்களுடன் பேசினார்.
எங்களை கூட ஒரு இந்தியர் மிரட்டினார்
மேலும், ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல முடிவு செய்தால், அவர்களை பாகிஸ்தான் மிகவும் நன்றாக கவனித்துக்கொள்ளும் என்று அப்ரிடி கூறினார். "நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். இதற்கு முன், மும்பையைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் எங்களை மிரட்டினார். நான் பெயர் கூற விரும்பவில்லை, எங்களை இந்தியாவில் அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டினார். ஆனால் நாங்கள் அவை அனைத்தையும் ஓரமாக வைத்துவிட்டோம். அதன்பின்னும் அதை எங்கள் அரசு பொறுப்பாக ஏற்று பாகிஸ்தான் அணியை இந்தியாவிற்கு அனுப்பியது. எனவே மிரட்டல்கள் நம் உறவை சிதைக்கக்கூடாது" என்றார்.
இது சண்டைகளின் தலைமுறை அல்ல
இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் உறவுகளின் பழைய கதைகளைப் பற்றி பேசுகையில் அவர், 2005 இல் இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் மறக்கமுடியாத நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். "இந்தியா வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு படியாக இருந்திருக்கும். இது போர்கள் மற்றும் சண்டைகளின் தலைமுறை அல்ல, உறவுகள் நன்றாக இருக்க வேண்டும், நாங்கள் இந்தியாவுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளோம். நாங்கள் இந்தியாவுக்கு வந்தபோது எங்களுக்கு சிறப்பான வரவேற்பும், அன்பும், பாசமும், கிடைத்தது நினைவிருக்கிறது. 2005 தொடரை நினைவுகூர்ந்தால் ஹர்பஜனும், யுவராஜும் ஷாப்பிங் மற்றும் உணவகங்களுக்குக் கூட்டிச் செல்வார்கள், அவர்களிடம் யாருமே பணம் வசூலிக்கவில்லை, இதுதான் இரு நாடுகளின் அழகு," என்று அவர் கூறினார்.