இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின், கோலி, ரோகித் ஆகியோரின் புகழ் கொடிக்கட்டி பறக்கும் நேரத்தில் அவர்களின் நிழலில் மறைந்துவிட்டது ஷிகர் தவான் செய்த சீரும் சிறப்புமான வேலைகள் என்று தவானை பாராட்டியுள்ளார்.


தவானின் பரிதாப நிலை


இந்தியா கடந்த ஆண்டு 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது, அதில் ஷிகர் தவான் 22-ல் இடம்பெற்றிருந்தார், அதில் ஒன்பது போட்டிகளில் கேப்டனாகவும் இருந்தார். வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மாவை விட ஒரு போட்டி அதிகமாகவும், அப்போதைய துணை கேப்டனாக இருந்த கேஎல் ராகுலை விட இரண்டு போட்டிகள் அதிகமாகவும் கேப்டன்சி செய்திருந்தார். ஆனால் சோகம் என்னவென்றால் 2023 ஆம் ஆண்டில் அவர் அணியில் மாற்று வீரராக கூட இல்லை. அவர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டார். தவான் அவ்வளவு மோசமாக ஆடினாரா? அவர் 2022 இல் 34 சராசரியில் 688 ரன்களை குவித்தார். 34 அவ்வளவு மோசம் இல்லை என்றாலும் அவரது ஒட்டுமொத்த கரியர் சராசரியான 44.11 ஐக் கருத்தில் கொண்டு பார்த்தால் சற்று குறைவுதான். அது போக அவர் அவ்வருடம் சதமும் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த வருடம் நிறைய வாய்ப்பு பெற்றதற்குக் காரணம், அந்த 24 ஒருநாள் போட்டிகளில் பெரும்பாலான போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாததுதான். டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் கவனம் இருந்ததால் அவர்களின் பணிச்சுமை குறைக்கப்பட்டு தவான் தலைமையிலான அணி செயல்பட்டு வந்தது.



இளம் வீரர்கள் ஆக்கிரமிப்பு


டி20 உலகக்கோப்பை முடிந்தது, ஒருநாள் உலகக்கோப்பைக்கான தயார்படுத்துதல் தொடங்கியது, ரோகித், கோலி அணிக்கு திரும்ப, இஷான் கிஷன், ஷுப்மான் கில் இரட்டை சதம் அடுத்தடுத்து அடிக்க, இந்தியாவின் ODI XI இல் தவானுக்கு இடமில்லாமல் போனது. அவர் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி 20 ஐ அணிகளில் தனது இடத்தை இழந்திருந்த நிலையில், இப்போது ஒருநாள் போட்டிகளிலும் அணி நிர்வாகம் அவரை ஒதுக்கிவிட்டதாக தெரிகிறது. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு, அவர் பத்து வருடங்களுக்கு மேலாக இந்தியாவின் நிலையான ஒயிட் பால் ஒப்பனராக இருந்தார். ரோஹித்துடனான அவரது ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் உலக கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான ஒன்றாகும் என்றால் மிகையில்லை.


தொடர்புடைய செய்திகள்: Adani Explains: எனக்கு இதுதான் முக்கியம்..! பங்குகள் விற்பனையை நிறுத்தியது ஏன்? - மவுனம் கலைத்த அதானி


தவானின் புகழ் தெரியாமல் போனது 


தவானின் சக வீரரும் இந்திய ஆல்-ரவுண்டருமான ரவிச்சந்திரன் அஷ்வின் தனது யூடியூப் சேனலில் ஷிகர் தவானை குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், "டாப் 3 பேட்ஸ்மேன்கள் சோதப்பும்போது, கடந்த காலங்களில் எங்கள் அணிக்கு நிறைய சிக்கல்கள் ஏற்பட்டன. ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அப்படி ஒரு கட்டமைப்பை எழுப்பி இருந்தனர். ஆனால் நாம் ரோஹித் மற்றும் கோலி பற்றி நிறைய பேசுகிறோம், தவான் என்ற ஒருவரை மறந்துவிட்டோம். இருவரும் கொடிகட்டி பறக்கையில் அவர் அமைதியாக தனது வேலையைச் செய்து கொண்டிருந்தார் ”என்று அஸ்வின் கூறினார்.



இஷான் இடம் கில்லுக்கு


அஸ்வின் லைன்-அப்பில் இடம்பிடிப்பதில் உள்ள போட்டியைப் பற்றிப் பேசியபோது, “இப்போது இந்திய அணி ஷிகர் தவானை திரும்ப அழைக்க வேண்டுமா அல்லது இரட்டை சதம் அடித்த இஷான் கிஷானுடன் செல்வதா? ஒரு பெரிய ஸ்கோரின் அடிப்படையில் ஒரு வீரரை ஆதரிப்பதற்கு பதிலாக, அணிக்கு என்ன தேவை என்பதை நாம் பார்க்க வேண்டும். யார் ப்ரஷரான சூழ்நிலையில் நன்றாக விளையாடுவார்கள்? யார் நீண்ட காலத்திற்கு இந்திய அணிக்கு சேவை செய்வார்கள்? இரட்டை சதம் அடித்த பிறகும் இஷான் கிஷன் ஒப்பனராக தொடரவில்லையே. ஷுப்மான் கில் அந்த இடத்தை தட்டி பறித்துக்கொண்டாரே. அவர் அதிக ரன்களை குவித்ததுடன், அணிக்காக மிகவும் நிலையான பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். அவர் ஸ்லாக் ஸ்வீப் மற்றும் ட்ரடிஷனல் ஸ்வீப் இரண்டுமே நன்றாக விளையாடுகிறார். வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து துவைக்கவும் செய்கிறார். ஸ்மார்ட் பேட்டிங், தரமான பேட்டிங் பங்களிப்பை கொடுப்பதோடு இறுதி நேரத்தில் அதிரடியும் காண்பிக்கிறார். அவர் கடைசி நான்கு ஓவர்களில் தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்து, ஹைதராபாத் ஒருநாள் போட்டியில் டபுள் செஞ்சுரி அடித்தார்” என்று அஷ்வின் மேலும் கூறினார்.