ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற்றது. இதில், ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அதன்படி, கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர் கொண்டது இந்திய அணி.
இதில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர், இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 43-வது ஓவரிலேயே 241 ரன்கள் எடுத்து இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. உலகக் கோப்பையை வெல்வோம் என்று காத்திருந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
பந்து வீச்சாளர்களின் சிறப்பு:
அதேநேரம், இந்திய அணியில் பேட்ஸ்மேன்களுக்கு இணையாக பந்து வீச்சாளர்களும் இந்த முறை தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை தங்கள் வசப்படுத்தினார்கள். அந்த வகையில், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது பந்து வீச்சில் எதிரணி வீரர்களை மிரட்டினார்கள் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சிறப்பாக விளையாடினார்கள்.
இந்நிலையில், பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பந்து வீச்சாளர்களும் பாரட்டப்பட்டதாக கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.
ஒரு நல்ல விஷயம்:
இது தொடர்பாக கெளதம் கம்பீர் பேசுகையில், “இந்த உலகக் கோப்பையில் நிகழ்ந்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் நாம் பந்து வீச்சாளர்களை பற்றி அதிகமாக பேச துவங்கியுள்ளோம். இது தொடர்ந்தால் பந்து வீச்சாளர்களாக வருவதற்கு வருங்காலங்களில் எந்த வீரர்களும் தயங்க மாட்டார்கள்.
ஒருநாள் கிரிக்கெட்டில் விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதே போல ஐபிஎல் தொடரிலும் பந்து வீச்சாளர்களை விட பேட்ஸ்மேன்கள் அதிக பணத்தை பெறுகின்றனர். பொதுவாக பாகிஸ்தான் போல இந்தியாவால் வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் தற்போது நம்மிடம் இருக்கும் 3 பேர் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சார்களாக இருக்கின்றனர்.
அவர்களைப் பற்றி தற்போது நாமும் அதிகமாக பேசுவதை நினைத்து பெருமைப்படுகிறேன். இது அடுத்த தலைமுறையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார் கெளதம் கம்பீர்.
மேலும் படிக்க: Usman Khawaja: ஆஸ்திரேலியாவை நேசிக்கிறேன்.. ஆனா.. பாகிஸ்தானுக்கும் தனக்குமான தொடர்பு குறித்து பகிர்ந்த உஸ்மான் கவாஜா..
மேலும் படிக்க: Ind vs Sa t 20: நான் நிதானமாக விளையாடுவதற்கு காரணம் யார் தெரியுமா? ருதுராஜ் கெய்க்வாட் சொன்னது இவரைத்தானா!