உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது இந்திய அணி. இதனை அடுத்து உள்நாட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் 4- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி. 


இந்தியா - தென்னாப்பிரிக்கா:


தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு 3 டி20 போட்டிகளை சூர்யகுமார் யாதவ் தலைமையிலும்,  3 ஒரு நாள் போட்டிகளை கே.எல்.ராகுல் தலைமையிலும், 2 டெஸ்ட் போட்டிகளை ரோஹித் சர்மா தலைமையிலும் விளையாட உள்ளது.


அந்த வகையில் இன்று (டிசம்பர் 10) முதல் டி 20 போட்டி நடைபெற உள்ளது.  ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதுபோல் தென்னாப்பிரிக்காவையும் இந்திய அணியின் இளம் படை வீழ்த்தும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.


முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது டி 20 போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 123 ரன்களை விளாசியிருந்தார். அதேநேரம், முதல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்த அவரை பின்னர் அடித்து ஆடத்தொடங்கினார். அந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.


இந்நிலையில் தம்முடைய ஓப்பனிங் பார்ட்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடும் பேட்டிங்கை வெளிப்படுத்துவதால் எதிர்ப்புறம் தாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாக ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். 


அதே ஸ்டைலை தென்னாப்பிரிக்க தொடரிலும் தமக்கு வாய்ப்பு கிடைத்தால் தொடர்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.


என்னுடைய வேலை:


இது தொடர்பாக பேசியுள்ள அவர், “ஜெய்ஸ்வால் பெரும்பாலும் முதல் பந்திலிருந்தே அட்டாக் செய்யும் ஷாட்களை அடித்து பேட்டிங் செய்யக் கூடியவர். அவர் நின்று நிதானமாக விளையாடக் கூடியவர் அல்ல. எனவே மறுபுறம் நான் என்ன ரிஸ்க் இருக்கிறது என்பதை கணக்கிட்டு அணிக்கு என்ன தேவை என்பதற்கேற்றார் போல் விளையாட முயற்சிக்கிறேன்.


ஏனெனில் எதிர்ப்புறம் எப்படியும் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட முயற்சிப்பார். அதனால் மற்றொரு புறத்தை நிலையாகப் பிடித்து அவர் எதிர்புறத்தில் அதிரடியாக விளையாடுவதற்கான வழியை கொடுப்பது என்னுடைய வேலையாகும். அவருடன் நான் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்கிறேன்” என்று கூறியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.


மேலும் படிக்க: Ind vs Sa t20: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி 20 போட்டி... டாஸ் போடுவதில் தாமதம்... காரணம் என்ன?


மேலும் படிக்க: Usman Khawaja: ஆஸ்திரேலியாவை நேசிக்கிறேன்.. ஆனா.. பாகிஸ்தானுக்கும் தனக்குமான தொடர்பு குறித்து பகிர்ந்த உஸ்மான் கவாஜா..