ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்:


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி அங்கு மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி  டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு 36 வயதான  உஸ்மான் கவாஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 1986 இல் பிறந்த உஸ்மான் கவாஜாவின் குடும்பம் அவருக்கு நான்கு வயதாக இருந்தபோது ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது. 2011-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே புகழ்பெற்ற ஆஷஸ் தொடர் நடந்து வந்தது.


சிட்னியில் நடந்த இந்தத்தொடரின் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான ரிக்கி பாண்டிங் காயம் காரணமாக விளையாடவில்லை. அவரது இடத்தில்  11 பேரில் ஒருவராக விளையாட உஸ்மான் கவாஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மூன்றாவது இடத்தில் களம் இறங்கினார்.


இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற முதல் முஸ்லிம் வீரர் என்ற பெயரையும் பெற்றார்.


இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 37 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 21 ரன்களையும் அவர் எடுத்தார். இருப்பினும் இதற்குப் பிறகு கவாஜா அணிக்கு உள்ளேயும் வெளியேயும் சென்றபடி இருந்தார்.


முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 5004 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல், 40 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1554 ரன்கள் எடுத்துள்ள இவர், தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருக்கிறார்.


ஆஸ்திரேலியாவை நேசிக்கிறேன் ஆனால்...


இந்நிலையில், ஆஸ்திரேலியாவை தான் நேசிப்பதாகவும், பாகிஸ்தானுக்கும் தனக்குமான தொடர்பு குறித்து பகிர்ந்துள்ளார்.


இது தொடர்பாக உஸ்மான் கவாஜா பேசுகையில், “எனது தந்தை தாரிக் பாகிஸ்தானில் வளர்ந்தவர். கிரிக்கெட்டில் அவர் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளிப்பார். நாங்கள் ஆஸ்திரேலியாவில் வந்த குடியேறிய போது அவருக்கு 40 வயது இருக்கும். நான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் போது எனது தந்தையின் மனதில் ஏக்கம் இருக்கும்.


அதேநேரம் நான் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது சிறப்பான ஒன்றாக இருந்தது. நான் ஆஸ்திரேலியாவை நேசிக்கிறேன். அதேநேரம் நான் எங்கிருந்து வந்தேன் என்பதை மறக்க மாட்டேன். என் தந்தைக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் சிலர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தான்.” என்று பேசியுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா.