ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் க்டந்த 5ம் தொடங்கியது. மொத்தம் 48 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நடப்பு ஜாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, நெதர்லாந்துடன் இன்று (அக்டோபர் 9) விளையாடி வருகிறது. இந்த போட்டியானது ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் சரியாக 2 மணிக்கு தொடங்கியது.
நியூசிலாந்து- நெதர்லாந்து மோதல்:
டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, டெவோன் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி 12.1 ஓவரில் 67 ரன்கள் எடுத்தது. அதில் டெவோன் கான்வே 40 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என மொத்தம் 32 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய வில் யங் 80 பந்துகளில் 7 பவுண்டரிகளை விளாசி, 2 சிக்ஸர் உட்பட மொத்தம் 70 ரன்களை எடுத்தார். அப்போது, வான் மீகெரென் வீசிய பந்தில் பாஸ் டி லீடேவிடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார்.
ரச்சின் ரவீந்திரா:
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்காமல் 123* ரன்கள் எடுத்தார். அதேபோல், நெதர்லாந்துக்கு எதிரான இந்த போட்டியிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி, 51 பந்துகள் களத்தில் நின்ற ரச்சின் ரவீந்திரா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 51 ரன்கள் எடுத்து வான் டெர் மெர்வே பந்தில் அவுட் ஆனார்.
அப்போது 32.2 ஓவர்களின்படி நியூசிலாந்து அணி, 185 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது. பின்னர், களம் இறங்கிய டேரில் மிட்செல் 48 ரன்கள் எடுத்தார். க்ளென் பிலிப்ஸ் 4 ரன்களும் மார்க் சாப்மேன் 5 ரன்களுடன் ஆட்டமிழக்க, அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் 53 மிட்செல் சான்ட்னர் எடுத்தனர். இவ்வாறாக 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 322 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக நெதர்லாந்து அணியின் பந்து வீச்சாளர்கள், பால் வான் மீகெரென் மற்றும் ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கை பற்றினர்.