பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி மிகவும் துர்தஷ்டவசமாக அவுட் ஆனது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கண்ணிமைக்கும் நேரத்தில் அவுட்:


நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது நாளில் மதிய உணவிற்குப் பிறகு  ஆஸ்திரேலிய அறிமுக வீரர் டாட் மர்ஃபி வீசிய, முதல் பந்தில்,  விராட் கோலி கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆனது அவருக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது. 


விராட் கோலி அவுட் ஆன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கோலி 26 பந்துகளில் 12 ரன்களுக்கு தலை குனிந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியதுடன்  மார்ஃபியின் கணக்கில் இந்திய அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 






மோசமான ஒன்று:


கோலி ஆட்டமிழந்தபோது வர்ணனையில் இருந்த இந்திய அணியின் மூத்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், “ இப்படி ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆவது என்பது மிகவும் மோசமான ஒன்று" என்று குறிப்பிட்டார். இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்துள்ளது. களத்தில் இடது கை பேட்ஸ் மேன்களான ரவீந்திர ஜடேஜாவும்(66) அக்‌ஷர் பட்டேலும்(52) அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதன் மூலம் இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 


போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும், ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மர்பி சுழலில் சிக்கி, அஸ்வின், புஜாரா மற்றும்  விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதேநேரம், மறுமுனையில் ரோகித் சர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகளையும் விளாசினார். இதன் மூலம், ரோகித் சர்மா 171 பந்துகளில் டெஸ்ட் போட்டிகளில் தனது 9வது சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 14 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். இவரும் 212 பந்துகளில் 120 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 


மர்ஃபி அபாரம்:


அதன் பின்னர் ஸ்ரீகர் பரத் களமிறங்க, அவரும் மர்ஃபி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் தனது அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையை மார்ஃபி படைத்தார். மேலும், இந்திய அணிக்கு எதிரான போட்டியில்  அறிமுகமாகி, அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சிறப்பையும் மர்ஃபி பெற்றுள்ளார். 


அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அக்‌ஷர் பட்டேல், ஏற்கனவே களத்தில் நிதானமாக ஆடிக் கொண்டு இருந்த ஜடேஜாவுடன் கை கோர்த்தார். இருவரும் தொடர்ந்து நிதானமாக ஆடிவந்தாலும், அவ்வப்போது தவறான ஷாட்டுகளை அடித்தனர். இதனால் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் இந்த வாய்ப்பினை மிகவும் சரியாக பயன்படுத்தி அரைசதம் கடந்தனர். 


வெற்றி வாய்ப்பு பிரகாசம்:


இரண்டாவது நாளான இன்று மட்டும் இந்திய அணி 6 வெக்கெட்டுகளை இழந்து, 244 ரன்களை எடுத்துள்ளது. இதில் நான்கு விக்கெட்டுகள் மர்ஃபி வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதன் மூலம் இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாள் ஆட்ட முடிவினை வைத்து பார்க்கும் போது இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.