Rishabh Pant Photo: கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 






அதில் அவர், “One step forward One step stronger One step better” என குறிப்பிட்டுள்ளார். அவர் உடல்நலம் தேற ரசிகர்கள் பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 




ரிஷப் பண்ட் தற்போது மெல்ல மெல்ல காய்த்தில் இருந்து குணமடையும் நிலையில் உள்ளார். மேலும் சிலகாலம் தொடர்ந்து அவர் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.  2023ஆம் ஆண்டு தொடங்கி ஒன்ரறை மாதம் ஆன நிலையில் அவர் தற்போது தான் நடக்க ஆரம்பித்துள்ளார். இந்த ஆண்டு அவர் கிரிக்கெட் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. 


 


நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி வியாழன் அன்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்டில் அறிமுகமான கே.எஸ்.பாரத்துக்கு ரிஷப் பண்டின் காயம் முக்கிய கராணம் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு சதங்களுடன் ஏழு டெஸ்ட் போட்டிகளில் 61.81 என்ற சராசரியில் 680 ரன்களை குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆண்டு மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் ஜோஸ் பட்லரின் தலைமையிலான  இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 125 ரன்கள் எடுத்த பண்டுக்கு அதுதான்  தனது முதல் ஒருநாள் சதம் ஆகும். 


இப்படி சிறப்பான ஆண்டினைக் கொண்டிருந்த பண்ட்க்கு, ஏற்பட்ட கார் விபத்து 2023ஆம் ஆண்டில் கிரிக்கெட் விளையாடுவாரா என்ற கேள்விக்குறியைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் என்பது அவரது உயிருக்கே பெரும் ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 


இருப்பினும், டி20 அணியில் ரிஷப் பண்டின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. 2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ரிஷப் பண்ட் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் குணமடைவார் என்பது சாத்தியமில்லை என்பதால் அணி நிர்வாகம் இம்முறை வேறு ஒரு இந்திய வீரரை கேப்டனாக நியமிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 


அதேபோல், இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைக்கு 25 வயதான பண்ட் முழு உடல் தகுதி பெற முடியுமா என்பதை இப்போது அவர் முன் இருக்கக் கூடிய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அவர் தனது ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட்டில், இதுவரை  6 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன்,  இந்தியா இதுவரை உருவாக்கிய மிக வெற்றிகரமான விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.