அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அயர்லாந்து கிரிக்கெட் அணி, அமெரிக்காவுக்கு எதிராக 2 டி20, 3 ஒரு நாள் போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 1 டி20, 2 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது.


முதல் டி20 போட்டி டிசம்பர் 23-ம் தேதி தொடங்க இருந்தது. இந்நிலையில், அமெரிக்க கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.


அணியின் முன்னணி வீரர்களான ஸ்டீவன் டேலர், ஆரன் ஜோன்ஸ், ஜஸ்கரன் மல்ஹோத்ர, கரிமா கோரே ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஸ்டீவன் டேலரை தவிர மற்ற மூன்று வீரர்களும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.






அமெரிக்காவில், டிசம்பர் மாதம் முழுவதும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களோடு கால்பந்து போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு முக்கியமான கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வீரர்களுக்கு கொரோனா தொற்று, தொடர் ப்ரொமோ வெளியிடுவதில் சிக்கல் என அடுத்தடுத்து தடைகள் வருவதால் அமெரிக்காவுக்கும், கிரிக்கெட்டுக்கும் ‘செட் ஆகாது’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


சொந்த மன்னில் கிரிக்கெட் விளையாட்டை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க நினைத்திருந்த அமெரிக்க கிரிக்கெட் அமைப்புக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது. அமெரிக்க கிரிக்கெட் அணி மட்டுமின்றி, அயர்லாந்தை சேர்ந்த 4 கிரிக்கெட் வீரர்களுக்கும் கடந்த டிசம்பர் 17-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதனால், இரு அணிகளிலும் விளையாட இருக்கும் வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டு, புதிய அணிகளை அறிவித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனும் கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட், உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பால் அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை கிளப்பியது. இந்நிலையில், அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடத்துவதில் சிக்கல் தொடர்கிறது. இதுவரை, தொடர் ரத்து செய்யப்படாத நிலையில் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி தொடர் நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண