கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் வீரருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது மைதானத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீரர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இன்று கராச்சியில் உள்ள யுபிஎல் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற குவாய்ட்-இ-ஆசாம் டிராபி இறுதிச் சுற்றில் கைபர் பக்துன்க்வாவுக்கு எதிரான இன்னிங்ஸின் போது சென்ட்ரல் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபித் அலி விளையாடினார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.  அபித் 61 ரன்களில் போட்டியில் இருந்து விலகினார்.


அபித், இரண்டு முறை நெஞ்சுவலி என்று புகார் செய்ததை அடுத்து, அவரது அணி மேலாளர் அஷ்ரப் அலி, அவரை மருத்துவ கவனிப்பு மற்றும் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்.




இதனைத்தொடர்ந்து, அபித் உடனடியாக இருதய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கடுமையான கரோனரி சிண்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டது. 


“தற்போது, அவர் இருதயநோய் நிபுணரின் பராமரிப்பில் உள்ளார். நலமாக இருக்கிறார். இந்த நேரத்தில் அவரது மற்றும் குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அபித் அலி குணமடைய வேண்டி பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.






சமீபத்தில், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு அபித் அலி தனது உள்நாட்டு அணியான சென்ட்ரல் பஞ்சாப் அணிக்காக விளையாட நாடு திரும்பினார். டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் 133 மற்றும் 91 ரன்கள் எடுத்தார். மேலும் பாகிஸ்தானின் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


இரண்டாவது டெஸ்டில், அவர் ஒரே இன்னிங்ஸில் 39 ரன்கள் எடுத்தார். அவர் அந்த தொடரில் அதிக ரன்களை எடுத்தவர் மற்றும் தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண