ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.


இலங்கையில் இந்தாண்டு தொடக்கம் முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகினர். இதையடுத்து, அந்த நாட்டின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபற்றது. பெட்ரோல், டீசல் விலை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடும் விலையேற்றத்தால் நாடு முழுவதும் மக்கள் சாலைகளில் இறங்கி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.






இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய மக்களுக்கு பயந்து கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு தப்பியோடினார். இதையடுத்து, புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார். இலங்கையில் நிலவி வரும் மோசமான பொருளாதார சூழல் அந்த நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக நாடுகள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியது. இந்த இக்கட்டான சூழலில் மட்டும்தான் இலங்கை அணி ஆசிய கோப்பையில் களமிறங்கியது.


முன்னாள் சாம்பியனான இலங்கை அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த சம்பவம் அந்த நாட்டு ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. ஆனால், அதன்பின்னர் தொடரில் எந்த போட்டியிலும் தோற்காத இலங்கை அணி இறுதிப்போட்டியில் டாசில் தோற்ற பிறகு ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.






ஏனென்றால், துபாய் மைதானத்தில் முதலில் டாஸ் வெல்லும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகளவில் இருந்தது. 100 ரன்களை கடக்குமா என்ற மோசமான நிலையில் இருந்த இலங்கை அணி 170 ரன்களை குவித்தது. துபாய் மைதானத்தில் சேசிங்கில் அசத்தி வந்த பாகிஸ்தான் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.










இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து, கொழும்பு, கண்டி ஆகிய இலங்கை நகரங்களில் மக்கள் ஆனந்தத்தில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வீதிகளில் அந்த நாட்டு தேசிய கொடியுடன் மக்கள் உலா வந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பொருளாதார நெருக்கடியால் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கை நாட்டு மக்களுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் அணி ஆசிய சாம்பியன் பட்டம் வென்றது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இலங்கை மக்களின் புன்னகைக்காகவே ஆடுகிறோம் என்று கேப்டன் தசுன் சனகா கூறியதை நிஜமாக்கி அந்த நாட்டு மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.