ஆசிய கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி பனுகா ராஜபக்சே மிரட்டலான அரைசதம், ஹசரங்கா அதிரடியால் 170 ரன்களை குவித்தது. இதையடுத்து, 171 ரன்கள்  இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முதல் பந்தை எதிர்கொள்ளாமலே 9 ரன்கள் கிடைத்தது. மதுஷனகா வைடாக வீசியதால் அந்த ரன் கிடைத்தது.


இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த கேப்டன் பாபர் அசாம் இந்த போட்டியிலும் ரசிகர்கள் ஏமாற்றம் அளித்தனர். அவர் மதுஷன் பந்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பக்கர் ஜமான் முதல் பந்திலே போல்டாகி கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்காக ரிஸ்வான் – இப்திகார் அகமது ஜோடி சேர்ந்தனர்.




இருவரும் இணைந்து நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார். சிங்கிள்களாகவும், இரண்டு ரன்களாகவும் பாகிஸ்தான் ஸ்கோரை ஏற்றினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை 93 ரன்களாக உயர்த்தியபோது இந்த கூட்டணியை மதுஷன் பிரித்தார். இப்திகார் அகமது 31 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய முகமது நவாஸ் தடுமாறினார். இதனால் சிக்ஸர் அடிக்க முயற்சித்து முகமது நவாஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.


அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் தொடக்க வீரராக களமிறங்கிய முகமது நிவாஸ் அரைசதம் விளாசினார். அரைசதம் விளாசிய பிறகு அதிரடியாக ஆட வேண்டிய கட்டாயத்திற்கு சென்ற முகமது ரிஸ்வான் சிக்ஸருக்கு அடித்த பந்தை எல்லைக்கோட்டில் குணதிலகா கேட்ச் பிடித்ததால், 49 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.




ரிஸ்வான் ஆட்டமிழந்ததால் போட்டியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஹசரங்கா வீசிய அதே ஓவரில் பாகிஸ்தானின் பினிஷர் ஆசிப் அலி டக் அவுட்டாகினார். அதே ஓவரில் குஷ்தில்ஷா 2 ரன்களில் ஆட்டமிழந்ததால், ஒரே ஓவரில் மட்டும் ஹசரங்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தை இலங்கை வசம் கொண்டு வந்தார். பாகிஸ்தானின் கடைசி நம்பிக்கை ஷதாப்கானும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்டது.


பாகிஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  இலங்கையின் சார்பில் மதுஷன் 4 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஹசரதுங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கருணரத்னே 2 விக்கெட்டுகளையும், தீக்‌ஷனா 1 விக்கெட் வீழ்த்தினர்.




முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த இலங்கை அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 6வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.