ஸ்காட்லாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான குரூப் பி தொடக்க டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தின் போது, ஒரு வேடிக்கையான தருணம் கேமராவில் பதிவாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று
டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் துவங்கி உள்ளன. தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நமீபியா, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, யுஏஇ, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேரடியாக தேர்வான நாடுகளுக்கு இந்த தகுதி சுற்று முடிந்த பின்புதான் போட்டிகள் நடைபெறுகின்றன.
பிக்னிக் ஸ்பாட்டாக மாறிய மைதானம்
இந்த போட்டிகளை காண பெரிதளவில் ரசிகர்கள் வரவில்லை என்றாலும், பிக்னிக் செல்வது போல ஆஸ்திரேலிய வாழ் மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களும் போட்டியை பார்கிறார்களோ இல்லையோ, குளிர் பானங்களை குடித்துக்கொண்டு, ஆசுவாசம் செய்துகொண்டிருக்கின்றனர். அங்கு சிலர் குழந்தைகளையும் கூட்டி வந்து பிக்னிக் ஸ்பாட்டாக மாற்றி உள்ளனர்.
வைரலாகும் விடியோ
இப்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், தத்தி தத்தி நடக்கும் குழந்தை ஸ்டாண்டிலிருந்து கீழே விழுவதைக் காண முடிகிறது. பயந்து போன தந்தையும் பின்னாலேயே ஓடி வந்து குதிக்கிறார். ஸ்டாண்ட் அவ்வளவு உயரமாக இல்லாததால், அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு காயம் ஏற்படவில்லை. இந்த வீடியோவை பார்த்த பலர் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று பதறுகின்றனர். இந்த விடியோ கிரிக்கெட் போட்டியில் கேமராவில் எடுக்கப்பட்டி லைவாக ஒளிபரப்பானது, அதனை தொலைக்காட்சியில் இருந்து விடியோ எடுத்திருப்பது தெளிவாக தெரிகிறது.
மேற்கிந்திய தீவுகள் தோல்வி
போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது, ஸ்காட்லாந்து பேட்டிங்கில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஸ்காட்லாந்து அணி மேற்கிந்திய தீவுகளை 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஸ்காட்லாந்து அணி ஜார்ஜ் முன்சி 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் அந்த அணி 160 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணியின் வெற்றி உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரண்டாவது அதிர்ச்சியாக உள்ளது. முதல் அதிர்ச்சி ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை, நமீபியா தோற்கடித்ததுதான்.