இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரோஜர் பின்னியை தலைவராக தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. 






இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும், 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்திருந்த ரோஜர் பின்னி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 36வது தலைவராக இன்று நியமிக்கப்பட்டார். மும்பையில் நடந்த பிசிசிஐ ஏஜிஎம்மில் அவரது நியமனம் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதிலாக பின்னி பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


முன்னதாக, பிசிசிஐ தலைவர் பதவிக்கு 67 வயதான ரோஜர் பின்னி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து வேறு யாரும் பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யாததால், பிசிசிஐ கூட்டத்தில் ரோஜர் பின்னி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டார். 






ரோஜர் பின்னி : 


67 வயதான ரோஜர் பின்னி கடந்த 1979-87 வரை டெஸ்ட் போட்டிகள் விளையாடி 47 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். அதேபோல், 1980-87 வரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். 


அதிலும், முக்கியமாக 1983 உலகக் கோப்பையில் ரோஜர் பின்னி 8 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தினார். (சிறந்த பந்துவீச்சு 4-29) இதையடுத்து உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை ரோஜர் பின்னி படைத்தார். 


ஐபிஎல் தலைவர் பதவியில் மாற்றம்


பிசிசிஐ தலைவர் பதவி மட்டுமின்றி ஐபிஎல் தலைவர் பதவியும் அறிவிக்கப்படும். ஐபிஎல்லின் புதிய தலைவராக அருண் துமால் பதவியேற்கவுள்ளார். அதே நேரத்தில், அவருக்குப் பதிலாக பிசிசிஐ பொருளாளர் பதவியை  ஆஷிஷ் ஷெலர் ஏற்க இருக்கிறார் . மும்பை பாஜகவின் தலைவராக இருப்பவர் ஆஷிஷ் ஷெலர் என்பது குறிப்பிடத்தக்கது.