சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்றுவிட்ட தோனி, இன்னமும் ஐபிஎல்-இல் மட்டும் விளையாடி வருகிறார். ஐபிஎல்-ல் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் அவரை இம்முறையும் சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த டி20 உலகக் கோப்பையின்போது இந்திய அணியின் மெண்டராகவும் செயல்பட்டார். தற்போது இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் மேட்ச் விளையாடுவதாலும், ஐபிஎல் தொடங்க இன்னும் சில மாதங்கள் இருப்பதாலும் நல்ல ஓய்வில் இருக்கிறார் தோனி. ஓய்வு நேரங்களிலும் தங்களை ஃபிட்டாக வைத்துக்கொள்வதற்கு விளையாட்டு வீரர்கள் விளையாடிக் கொண்டுதான் இருப்பார்கள். அப்படி தோனி அடிக்கடி கால்பந்து, பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகள் விளையாடி பார்த்திருக்கிறோம். அவருடைய சனிக்கிழமை காலைகள் எப்படி இருக்கும் என்பது குறித்து இன்று காலை ஒரு சிறப்பு வீடியோ ட்விட்டரில் வெளியாகி உள்ளது.






அந்த வீடியோவில் தோனி சில நண்பர்களுடன் பேட்மிட்டன் விளையாடிக்கொண்டிருக்கிறார். வெறும் 6 நொடிகளே எடுக்கப்பட்ட வீடியோவில் தோனி மெரூன் நிற டீ-ஷர்ட் அணிந்து, கருப்பு நிற நிக்கர் அணிந்து விளையாடிக்கொண்டிருக்கிறார். இரட்டையர் போட்டியாக விளையாடிய அவர்களுள் முன்னாள் நிற்கும் தோனி முதல் இரண்டு ஷாட்களை பின்னால் நிற்பவருக்கு விட்டு குனிந்து நிற்கிறார். அதனை எதிர் அணியினர் தவறவிட, பின்னர் பொசிஷன் மாறி நிற்கிறார் தோனி. அஷ்வினி அசோகன் என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். 



2022 ஐபிஎல் தொடருக்கான விறுவிறுப்பு இப்போதே அதிகரிக்க தொடங்கிவிட்டது. 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஜனவரி கடைசி வாரம் நடக்க உள்ளது. அதற்கு முன் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைக்கலாம் என்று பிசிசிஐ ரீடெயின் வாய்ப்பு அளித்தது. இதற்கான ரீடெயின் நிகழ்வு நவம்பர் 30 மாலை நடைபெற்றது. 2022 தொடருக்கான ரிட்டென்ஷனுக்கு முன்பே தோனி சிஎஸ்கே அணியில் தொடர்வேன் என்று அறிவித்து இருந்தார். அடுத்த 5 வருடங்களுக்கு கூட ஆடுவேன் என்று தோனி சென்னையில் நடந்த விழாவில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தோனி சிஎஸ்கே அணியில் மீண்டும் பல கோடிகளுக்கு ரீடெயின் செய்யப்படுவதை விரும்பவில்லை. இது அணியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் சம்பளத்தை குறைத்துக்கொண்டு 12 கோடிக்கு ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தோனி மீண்டும் சிஎஸ்கே அணியை தலைமை தங்குவார் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.