செவ்வாய்க்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) ஆஸ்திரேலியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான பாக்சிங் டே டெஸ்டின் 2-வது நாளில், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோரக்யா, வேகமாக நகரும் ஸ்பைடர் கேமராவினால் அடிபட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


நோர்க்யாவை தாக்கிய கேமரா


ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸின் போது நோரக்யா பேக்வார்டு ஸ்கொயரில் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸின் 'ஃப்ளையிங் ஃபாக்ஸ்' கேமரா வேகமாக நகர்ந்து நோரக்யாவை தாக்கியது. வேகமாக தாக்கிய நிலையில் அவரது தலையில்பட்டு கீழே விழுந்தார். உடனே எழுந்துவிட்டாலும் பலமாக தாக்கியதால் மற்ற வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விசித்திரமான சம்பவத்திற்குப் பிறகு நோர்க்யாவை சுற்றி கூட்டமாக வீரர்கள் கூடினர். அவர் நலமாக இருக்கிறாரா என்று அருகே சென்று பரிசோதித்தவர்களில் களத்தில் பேட்டிங் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்தும் ஒருவர்.






காயங்கள் ஏதுமில்லை


பிராட்காஸ்டர் செவன்-உடைய கேமரா சம்பவத்தின் மற்றொரு கோணத்தைக் காட்டியது. தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் ஓவர்களுக்கு இடையில் மைதானத்தில் தனது இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, வீரர்களுக்கு மேலே இருக்கும் வயர்-மூலம் நகரும் கேமராவானது, மிகவும் தாழ்வாகச் சென்று, பின்னாலிருந்து வேகப்பந்து வீச்சாளர் நோர்க்கியா மீது மோதியது. வேகமாக தாக்கியும் அதிர்ஷ்டவசமாக நோர்கியாவிற்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.


தொடர்புடைய செய்திகள்: IND vs SL: இலங்கைத் தொடரில் ஹர்திக் தலைமையில் களமிறங்கும் இளம் பட்டாளம்..? 2023ல் அதிரடி மாற்றமா..?


நோர்க்யாவின் அபாரமான பந்துவீச்சு


மதிய உணவிற்குப் பிறகு, நோர்க்யாவின் அற்புதமான வேகப்பந்து வீச்சு ஷோவிற்கு பிறகு இந்த வினோதமான சம்பவம் நடந்தது. நான்கு ஓவர்கள் வீசி 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த அவரது பந்துகளை தொடுவதற்கே யோசித்தனர் ஆஸ்திரேலிய அணி வீரர்கள். இதற்கிடையில் டேவிட் வார்னர் 2 ஆம் நாள் மதிய உணவுக்குப் பிறகு தனது சதத்தை அடித்தார். இன்றைய நாள் முடிவதற்கு முன் இரட்டை சதம் அடித்த அவர் ரிட்டயர்டு ஹர்ட் கொடுத்துவிட்டு ஓய்வெடுக்க சென்றுவிட்டார். மீண்டும் நாளைய ஆட்டத்தில் தொடர்ந்து களமிறங்குவார் என்று தெரிகிறது. 






ஃபார்முக்கு திரும்பிய வார்னர்


தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்-இல் 189 ரன்களுக்கு சுருண்ட நிலையில் மிகப்பெரிய முதல் இன்னிங்ஸ் லீட்டிங் வைப்பதற்கான முயற்சியில் டேவிட் வார்னர் விளையாடி வருகிறார். அந்த அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 386 ரன்கள் குவித்துள்ள நிலையில் கையில் 7 விக்கெட் வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது வீரர் என்ற பெருமையை வார்னர் பெற்றுள்ளார். அவரது எதிர்காலம் சமீபத்திய மோசமான ஃபார்மினால் தொடர்ந்து சந்தேகத்திற்குரியதாக இருந்து வந்தது, ஆனால் இன்றைய இந்த ஆட்டத்திற்கு பிறகு மீண்டும் நிலையான இடத்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 36 வயதான அவர் ஜனவரி 2020 முதல் அடித்த முதல் சதம் இதுதான். மேலும் பிரிஸ்பேனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் 0 மற்றும் 3 ரன்களை மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.