இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையை வென்ற யஷ் துல் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் 3ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதிக்குள் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டி20 மற்றும், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த போட்டித் தொடரில் இந்திய அணியின் முழுநேரக் கேப்டன் ரோகித் காயம் காரணமாக விளையாட மாட்டார். கே. எல். ராகுலுக்கு இந்த தொடருக்கான அட்டவணை காலத்தில் திருமணம் நடக்கவுள்ளதால் அவரும் களமிறங்கமாட்டார் என ஏற்கனவே கூறப்பட்டது.
தற்போது அணியின் சீனியர் ப்ளேயர் விராட் கோலி களமிறங்க மாட்டார் என கூறப்படுகிறது. அவர் தொடர்ந்து விளையாடி வருவதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்திய அணி நிர்வாகம் சீனியர் ப்ளேயர்கள் இல்லாமல், இளம் படையைக்கொண்டு இலங்கையை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த தொடரில் இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையை வென்ற யஷ் துல்லை அறிமுகப்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.