லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து வீரர்கள் ஷேன் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தினர். ஆட்டக்காரர்களும் நடுவர்களும் ஆடுகளத்திற்குப் பக்கத்தில் ஒரே வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். பெரிய திரையில் வீடியோ தொகுப்பாக மறைந்த ஷேன் வார்னே குறித்த விடியோ ஒளிபரப்பாக, மொத்த கூட்டமும் சேர்ந்து ஸ்பின் கிங்கிற்காக 23 நொடிகள் கைதட்டியுள்ளனர்.


வார்னே மரணம்


பிரபல கிரிக்கெட் வீரரான வார்னே தனது 52வது வயதில் மார்ச் மாதம் 4ஆம் தேதி காலமானார். வார்னேவின் மறைவு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. வார்னேவின் இறப்பு குறித்த பல கட்ட விசாரணைக்கு பின் அவரது இறுதிச் சடங்கு மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இதில் வார்னேவின் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என 80 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். வார்னே தனது கிரிக்கெட் பயிற்சியை தொடங்கிய செயின்ட் கில்டா அகாடமியிலேயே வார்னேவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.



லார்ட்ஸ் போட்டி


இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளான இன்று, மறைந்த ஷேன் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 23 ஓவர்களுக்குப் பிறகு 23 வினாடிகள் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. 23வது ஓவர் முடிந்ததும், வீரர்கள் மற்றும் நடுவர்கள் ஆடுகளத்திற்கு அருகில் வரிசையாக நின்று அஞ்சலி செலுத்தினர். ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் வாங்கிய ஷேன் வார்னே குறித்த விடியோ தொகுப்பு பெரிய திரையில் அஞ்சலி செலுத்தும் விதமாக ஒளிபரப்பானது. ரசிகர்களும் இதில் கலந்து கொண்டு மறைந்த கிரிக்கெட் வீரருக்கு அஞ்சலி செலுத்தினர். பேக்கி கிரீன்ஸ் அணிக்காக வார்ன் 23 என்ற ஜெர்சி அணிந்திருந்தார். எனவேதான் இந்த 23 செண்டிமெண்ட். அதுமட்டுமின்றி லார்ட்ஸின் வர்ணனையாளர்கள் அமர்ந்து வர்ணனை செய்யும் பெட்டிக்கு பெயர் சூட்டினர். இனி அது 'ஷேன் வார்னே வர்ணனை பெட்டி' என்று அழைக்கப்படும். 






வார்னே சாதனைகள்


டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஷேன்வார்ன். டெஸ்ட் போட்டியில் மட்டும் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போதுவரை பல பேட்ஸ்மேன்களின் கனவில் சிம்ம சொப்பனமாக திகழ்பவர். 1992 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடினார். வார்ன், தனது சூழல் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர். ஸ்பின்னர்கள் என்றாலே ஆல் டைம் பெஸ்ட் வரிசையில் ஷேன்வார்னேவுக்கு தனி இடம் உண்டு. இவ்வளவு புகழ் இருந்தபோதும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வார்னேவுக்கு புதிதல்ல. மைதானத்தில் சிகரெட் பிடித்தது , போக்குவரத்து விதிகளை மீறியதற்காக வாகனம் ஓட்ட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது என அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கியவர் வார்னே.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.